| அடல் கொள் சேனையும், அரக்கனும், தேரும் வந்து |
| ஆர்க்கும் |
| கடல் கொள் பேர் ஒலிக் கம்பலை என்பதும் கண்டார். |
|
கடல்கள் யாவையும் - கடல்கள் எல்லாம்; கல்மலைக் குலங்களும் - கல்வடிவான மலைக் கூட்டங்களும்; காரும் - மேகமும்; திடல்கொள் மேருவும் - வலிமை மிகுந்த மேருமலையும்; விசும்பிடைச் செல்வன சிவண - வானத்தில் செல்வனவற்றை ஒத்திருக்க; அடல் கொள் சேனையும்- வலிமை கொண்ட அரக்கர் படையும்; அரக்கனும் - இராவணனும்; தேரும் வந்து ஆர்க்கும் - தேரும் வந்து ஒலிக்கும்; கடல்கொள் பேர் ஒலிக்கம்பலை என்பதும் கண்டார் - கடல் போல ஒலிக்கின்ற பேரொலி அது என்பதையும் அறிந்தார். |
(34) |
9676. | 'எழுந்து வந்தனன் இராவணன்; இராக்கதத் தானைக் |
| கொழுந்து முந்தி வந்து உற்றது; கொற்றவ! |
| குலுங்குற்று |
| அழுந்துகின்றது, நம் பலம்; அமரரும் அஞ்சி, |
| விழுந்து சிந்தினர்' என்றனன், வீடணன், விரைவான். |
|
கொற்றவ !- வெற்றிகொண்ட இராமனே!; இராவணன் எழுந்து வந்தனன் - இராவணன் (தன் படையுடன்) புறப்பட்டு வந்தான்; வீடணன் விரைவான் - விரைந்து வந்த வீடணன்; இராக்கதர் தானைக் கொழுந்து முந்தி வந்து உற்றது - அரக்கர் படையின் முன்னணிப்படை முன்னர் வந்தடைந்தது; நம்பலம் குலுங்குற்று அழுந்துகின்றது - நம்படை நடுங்கி மூழ்குகின்றது; அமரரும் அஞ்சி விழுந்து சிந்தினர் - தேவர்களும் பயப்பட்டுக் கீழே விழுந்து சிதறிப் போனார்கள்; என்றனன் - எனக் கூறினான். |
(35) |