பக்கம் எண் :

 இராவணன் சோகப் படலம்3

சொல்லினார்- 'உன் மகன் இன்று இல்லாமற் போனான்'
என்று இராவணனிடம் கூறினர்.
 

இல்லை ஆயினன் - இறந்தான் என்று மங்கலமல்லாத
சொல்லைச் சொல்லுதற்கு அஞ்சி இங்ஙனம் சொல்லினர். 
 

(3)
 

9189.

மாடு இருந்த வர மாதவர், வானவர், 

ஆடல் நுண் இடையார் மற்றும் யாவரும், 

'வீடும், இன்று, இவ் உலகு' என விம்முவார், 

ஓடி, எங்கணும் சிந்தி ஒளித்தனர். 

 

மாடு இருந்த வரமாதவர் வானவர்-  (தூதர் சொன்னபோது)
இராவணன் அருகில் இருந்தவர்களாகிய  பெருந்தவமுடையவர்களும்,
தேவர்களும்; ஆடல் நுண் இடையார் மற்றும் யாவரும்- ஆடும்
இயல்பினராகிய  நுண்ணிய  இடையையுடைய  பெண்டிரும் மற்றும்
யாவரும்;   வீடும்,   இன்று,   இவ்உலகு'  என  விம்முவார்-
'இவ்வுலகம்  இன்று  அழியும்' எனப்  புலம்பி;  ஓடி, எங்கணும்
சிந்தி ஒளித்தனர்
- ஓடி எங்கும் சிதறி ஒளித்துக் கொண்டனர்.
 

மாடு - பக்கம், வீடுதல் - அழிதல், விம்முதல் -
தேம்பிப் புலம்புதல். 
 

(4)
 

தூதரை இராவணன் வாளால் வீசுதல்
  

9190.

சுடர்க் கொழும் புகை தீ விழி தூண்டிட, 

தடற்று வாள் உருவி, தரும் தூதரை 

மிடற்று வீசல் உறா, விழுந்தான்அரோ - 

கடல் பொருந் திரைபோல் கரம் சோரவே. 

 

விழி கொழும்புகை சுடர்த்தீ தூண்டிட- (இராவணன்) கண்கள்
கொழுவிய  புகையையும்   ஒளி  வாய்ந்த  சின  நெருப்பினையும்
கக்க; தடற்று வாள் உருவி தரும் தூதரை-  தன் உறையிலிருந்த
வாளை  உருவித்  துன்பச்  செய்தியைக்  கொணர்ந்த  தூதரை;
மிடற்று   வீசல்   உறா,   பெரும்  கடல்  திரைபோல்-
கழுத்தின்கண்  வீசத்  தொடங்கி   பெரிய   கடல்  அலைகள்
போல்;  கரம்  சோரவே  விழுந்தான் -  இருபது கரங்களும்
சோர்ந்து விழுந்தான்.
 

தடறு - உறை. 'தடற்றிடங்கொள்வாள்' (களவழி - 18) 
 

(5)