பக்கம் எண் :

302யுத்த காண்டம் 

எழுது   வீணை கொடு  - வரையப் பெற்ற வீணையைச்
(சின்னமாகக்) கொண்டு,;  ஏந்து  பதாகை மேல்  - உயர்ந்து
நிற்கும்  (இராவணன்)   கொடியின்  மீது;   கழுகும் காகமும்
மொய்த்தன 
  - கழுகுகளும் காகங்களும் சூழ்ந்து   பறந்தன; 
ஓடு இகல் ஆடல் மா  - பாயும்  இயல்புடைய போர் வல்ல
குதிரைகளின்; கண்கள்   நீர்  ஒழுகுகின்றன  -  கண்களில்
கண்ணீர் வார்ந்து கொண்டிருந்தன; சூழி மா - முகபடாமணிந்த
யானைகள்; தொழுவில்   நின்றன போன்றன  - பந்திகளில்
கட்டப்பட்டாற்போல் செயலற்று நின்றன. 
 

(21)
 

9725.

இன்ன ஆகி, இமையவர்க்கு இன்பம் செய்
துன்னிமித்தங்கள் தோன்றின; தோன்றவும்,
அன்னது ஒன்றும் நினைந்திலன், 'ஆற்றுமோ,
என்னை வெல்ல, மனித்தன்?' என்று எண்ணுவான்.*
 

இமையவர்க்கு   இன்பம்  செய்   -   தேவர்களுக்கு
மகிழ்ச்சியூட்டுகிற;     துன்னிமித்தங்கள்  - (இராவணனுக்கு)
கெட்ட சகுனங்களானவை; இன்னவாகி- இப்படிப்பட்டனவாகி;
தோன்றின  -   புலப்படலாயின; தோன்றவும்  - அவ்வாறு
புலப்படவும்; அன்னது  ஒன்றும் நினைந்திலன்   - அவை
குறித்தும்    ஏதும்  சிந்திக்காதவனாய்; 'என்னை   வெல்ல
மனித்தன் ஆற்றுமோ?' 
-   என்னை வெல்வதற்கு (எளிய)
மனிதனால்  முடியுமோ?'; என்று   எண்ணுவான் -  என்று
இராவணன் கருதலானான் 
 

(22)
 

9726.

வீங்கு தேர் செலும் வேகத்து, வேலை நீர்
ஓங்கு நாளின் ஒதுங்கும் உலகுபோல்,
தாங்கல் ஆற்றகிலார், தடுமாறித் தாம்
நீங்கினார், இரு பாலும் நெருங்கினார்.
 

வேலை நீர் ஓங்கு நாளின்- கடல் நீர் பொங்கியெழும்
(ஊழிக்) காலத்தில்; ஒதுங்கும் உலகுபோய் - இரு  புறமாய்
ஒதுங்கி நிற்கும் நிலம் போல; இருபாலும் நெருங்கினார் -
இருபக்கங்களிலும் நெருக்கமாகக் கூடியவர்கள்; வீங்கு தேர்
செலும் வேகத்து
- (இராவணனின்) வேகம் மிக்க தேர் ஓடும்
விரைவினால்;   தாங்கல் ஆற்றகிலார் - (அவ்விரைவைத்)
தாங்குதற்கு ஆற்றாதவர்களாய்; தடுமாறி  - நிலை குலைந்து;
நீங்கினார்- ஒதுங்கிக் கொண்டனர். 
 

(23)