பக்கம் எண் :

310யுத்த காண்டம் 

9743.

அரக்கன் அன்று எடுத்து ஆர்க்கின்ற ஆர்ப்பும், 

போர்ப்

பொருப்பு மெய் வில் தெழிப்பும் உண்டேகொலாம் - 

குரைக்கும் வேலையும் மேகக் குழாங்களும் 

இரைத்து இடிக்கின்ற, இன்றும் ஓர் ஈறு இல! 

 

அன்று- (இராம இராவணப்போர் நடந்த) அன்று; அரக்கன் -
இராவணன்; எடுத்து ஆர்க்கின்ற ஆர்ப்பும்- குரலெடுத்து
முழங்கிய முழக்கமும்; பொருப்பு மெய்- மலை போன்ற
வடிவுடைய; போர் வில் தெழிப்பும்- போர் வில்லினின்று
எழுப்பிய பேரொலியும்; உண்டே கொலாம்- (இன்றும்)
இருக்கின்றன போலும்! குரைக்கும் வேலையும்- ஒலிக்கின்ற
கடலும்; மேகக் குழாங்களும்- முகில் கூட்டங்களும்; இன்றும்
- இக்காலத்தும்; இரைத்து- பேரொலி செய்து;இடிக்கின்ற-
இடிமுழக்கம் செய்கின்றன;ஓர் ஈறு இல - அப்பேரொலிகட்கு
ஒரு முடிவே இல்லை.
 

இன்றும் கடல் முழங்குவதும் இடி இடிப்பதும் இராவணன்
முழக்கத்தின் தொடர்ச்சியோ என்னும்படி அமைந்துள்ளது.
தற்குறிப்பேற்ற அணி.
 

(40)
 

9744.

மண்ணில் செல்வன செல், இனும் மாசு அற 

எண்ணின் சூல் மழை அல்ல; இராவணன் 

கண்ணின் சிந்திய தீக் கடு வேகத்த 

விண்ணில் செல்வன, மீண்டு இன்று வீழ்வன. 

 

இனும் மாசு அற   எண்ணின்-   மேலும்   குற்றமின்றிச்
சிந்தித்துப் பார்ப்போமாயின்;   மண்ணில்   செல்வன செல்-
மண்ணின் மீது   வீழும்   இடியேறுகள்; சூல் மழை அல்ல-
கருக்கொண்ட   முகில்களில்   பிறப்பன அல்ல; இராவணன் -
அரக்கனாகிய இராவணன்; கண்ணில் சிந்திய தீ- (இராமனுடன்
போரியற்றுங்கால்)   கண்களில்   கக்கிய நெருப்பு; கடுவேகத்த
- விரைந்த   வேகத்தோடு;   விண்ணில்   செல்வன- வானில்
செல்லுவதே ஆகும்; மீண்டும் இன்று வீழ்வன - அந்நெருப்பே
இன்றும் வானிலிருந்து (இடியாக) வீழ்கிறது.
 

இப்பாடலில் தற்குறிப்பேற்ற அணி அமைந்துள்ளது.
 

(41)