பக்கம் எண் :

 இராவணன் வதைப் படலம்311

9745.

மால் கலங்கல் இல் சிந்தையன் மாதிரம் 

நால் கலங்க நகும்தொறும், நாவொடு 

கால் கலங்குவர், தேவர்; கண மழைச் 

சூல் கலங்கும்; இலங்கை துளங்குமால். 

 

மால்   கலங்கலில்   சிந்தையன்- திருமாலைக்  கண்டு
கலக்கமற்ற மனம் படைத்தவனான  இராவணன்; நால்  மாதிரம்
கலங்க
-  நான்கு திசைகளும் நிலைகுலையும்படி; நகும் தொறும் 
-  பெருஞ்சிரிப்புச்  செய்யும் போது;   தேவர்- தேவர்கள்; 
நாவொடு கால் கலங்குவர்- நாக்கும், பாதமும்  நடுங்குவர்;
சூல்- கருக்கொண்ட; கணமழை கலங்கும்- முகில் கூட்டங்கள்
கலங்கும்;  இலங்கை- இலங்கை மா நகரமும்;  துளங்கும்
நடுக்கம் கொள்ளும்.
 

(42)
 

9746.

இக் கணத்தும் எறிப்ப தடித்து என,

நெக்க மேகத்து உதிக்கும் நெருப்பு என, 

பக்கம் வீசும் படைச் சுடர், பல் திசை 

புக்குப் போக, பொடிப்பன போக்கு இல. 

 

பக்கம்- (இராவணனது இரு)  பக்கங்களிலும்; வீசும்
படைச்சுடர்
- ஒளி வீசுவனவாகிய ஆயுதங்களின் ஒளி; 
பல்  திசை புக்குப் போக
-  பல்வேறு திசைகளிலும் 
புகுந்து செல்பவை;   பொடிப்பன- (அனைத்தையும்) 
சாம்பலாக்கின; போக்கு  இல- தாம்  அழியாதிருந்தன;
(அவைதாம்)  இக்கணத்தும்- இந்த நேரத்திலே கூட; 
நெக்க மேகத்து
- சிதைந்த மேகத்தினிடத்து; உதிக்கும்
- தோன்றும்; நெருப்பு என - மின்னலாகவும்; தடித்து 
என
- இடியாகவும்; எறிப்ப- ஒளி வீசுகின்றன.
 

(43)
 

இராவணன் சின மொழி
  

9747.

'கொற்ற அம்பிற் கொடு கொல்லுதல் கோள் இலாச்

சிற்றையாளனைத் தேவர்தம் தேரொடும் 

பற்றி வானில் சுழற்றி, படியின்மேல் 

எற்றுவேன்' என்று உரைக்கும், இரைக்குமால். 

 

'கொற்ற அம்பிற் கொடு- வெற்றி தரும் அம்பு கொண்டு;
கொல்லுதல் - கொல்லுதலாகிய;  கோள்   இலா- நோக்கு
இன்றி;