பக்கம் எண் :

326யுத்த காண்டம் 

காற்று குதிரைகளைக் குறித்தது
 

9776.

உய்த்து உலகு அனைத்தினும் உழன்ற சாரிகை 

மொய்த்தது, கடலிடை மணலின் மும்மையால்; 

வித்தகர் கடவிய விசயத் தேர்ப் பரி, 

எய்த்தில வியர்த்தில, இரண்டு பாலவும். 

 

வித்தகர்- திறன் மிக்கவராகிய பாகர்கள்; கடவிய- செலுத்திய;
விசயத் தேர்ப்பரி
- வெற்றி (பலகண்ட) இராம இராவணர் தேரின்
குதிரைகள்;   உய்த்து-  செலுத்தப்பட்டு;  கடலிடை  மணலின் 
மும்மையால்  
-  கடற்கரைகளிலுள்ள   மணல்   துகள்களின் 
மும்மடங்காக  உள்ள;   உலகு   அனைத்திலும் -   எல்லா 
உலகங்களிலும்; உழன்ற  சாரிகை   மொய்த்தது   - திரிந்து 
சாரிகைகள் செய்து சேர்ந்தன (எனினும்); இரண்டு பாலவும் -
இரண்டு    பக்கத்துக்    குதிரைகளும்;     எய்த்தில 
இளைப்படையவில்லை; வியர்த்தில- வியர்வை சிந்தவுமில்லை.
 

(73)
 

இராமன் தேர்க்கொடியை இராவணன் அறுத்தல்
 

9777.

இந்திரன் தேரின்மேல் உயர்ந்த, ஏந்து எழில் 

உந்த அரும் பெரு வலி உருமின் ஏற்றினை, 

சந்திரன் அனையது ஓர் சரத்தினால், தரைச் 

சிந்தினன், இராவணன், எரியும் சிந்தையான். 

 

எரியும் சிந்தையான்- வெந்து    போன  நெஞ்சினனாகிய;
இராவணன் - இராவணன்; இந்திரன் தேரின் மேல் உயர்ந்த-
(இராமன் ஏறி வந்த) இந்திரனது தேரின் மீது   உயரே  பறந்த;
ஏந்து எழில் - அழகு மிக்கதும்; உந்து அரும் பெருவலி -
தள்ளுதற்கரிய பேராற்றலுடையதுமான;  உருமின் ஏற்றினை -
இடியேறாகிய (கொடியை); சந்திரன் அனையது ஓர் சரத்தினால்
- பிறைவடிவமுடைய ஒப்பற்ற அம்பினால்; தரைச் சிந்தினன்-
தரையில் விழும்படி செய்தான்.
 

(74)
 

9778.

சாய்ந்த வல் உருமு போய், அரவத் தாழ் கடல் 

பாய்ந்த வெங் கனல் என முழங்கிப் பாய்தலும், 

காய்ந்த பேர் இரும்பின் வன் கட்டி காலுறத் 

தோய்ந்த நீர் ஆம் எனச் சுருங்கிற்று, ஆழியே.