பக்கம் எண் :

4யுத்த காண்டம் 

இராவணன் புலம்பல்
 

9191.

'வாய்ப் பிறந்தும், உயிர்ப்பின் வளர்ந்தும்,வான் 

காய்ப்பு உறும்தொறும் கண்ணிடைக் காந்தியும், 

போய்ப் பிறந்து, இவ் உலகைப் பொதியும் வெந் 

தீப் பிறந்துளது, இன்று' எனச் செய்ததால். 

 

வாய்ப்பிறந்தும்  உயிர்ப்பின் வளர்ந்தும்- (இராவணனது)
வாயில்  பிறந்தும் அவனது  மூச்சுக்காற்றில்  வளர்ந்தும்; வான் 
காய்ப்பு  உறும்  தொறும் கண்ணிடைக் காந்தியும் போய்ப் 
பிறந்து
  -  பெரும்  வெறுப்பு  (வளர்ந்து)  தோன்றுந்  தோறும் 
கண்களிலே எரிந்து போய்த் தோன்றி; 'இவ்உலகைப் பொதியும் 
வெந்தீ
-  'இவ்வுலகத்தையெல்லாம் மூடுகின்ற வெப்பமிக்க தீ; 
இன்று  பிறந்துளது'  எனச் செய்ததால்
- இன்று பிறந்தது' 
என்று உலகம் சொல்லுமாறு பரவியது.
 

உலகைப் பொதியும் வெந்தீ - ஊழித்தீ. வான் - பெருமை,
காய்ப்பு - வெறுப்பு. 
 

(6)
 

9192.

படம் பிறங்கிய பாந்தளும் பாரும் பேர்ந்து, 

இடம் பிறங்கி, வலம்பெயர்ந்து ஈடு உற, 

உடம்பு இறங்கிக் கிடந்து உழைத்து, ஓங்கு தீ 

விடம் பிறந்த கடல் என வெம்பினான். 

 

படம் பிறங்கிய பாந்தளும் பாரும் - படம் விளங்குகின்ற
ஆதிசேடனும், அவனால் தாங்கப்பட்ட பூமியும்; இடம் பேர்ந்து
பிறங்கி, வலம் பெயர்ந்து ஈடு உற
- இடப்பக்கமாகப் பேர்ந்து 
பொருந்தியும் வலப்பக்கமாகப் பெயர்ந்து பொருந்தியும் வருத்தமுற; 
இறங்கிக்  கிடந்து  உடம்பு  உழைத்து
  -  இராவணன் தன் 
ஆசனத்திலிருந்து   இறங்கி  தரையில்  கிடந்து உடம்பு வருந்தி; 
ஓங்குதீ  விடம்  பிறந்த கடல் என வெம்பினான்
- ஓங்கிய 
கொடுமையுடைய நஞ்சு தோன்றிய கடல்போல வெதும்பினான்.
 

இராவணன் தரையில் கிடந்து வருந்தும்போது இடப்பக்கமும்
வலப்பக்கமுமாக உருண்டு புரண்டான். அங்ஙனம் அவன் புரளும்
போது  பூமியும்  அதனைத்  தாங்கியுள்ள ஆதிசேடனும் அவன்
புரளுதற்கேற்ப இடப்பக்கமும் வலப்பக்கமுமாகச் சாய்ந்து நிலை 
கெட்டு வருந்தின என்பதாம். நஞ்சு தோன்றிய கடல் அந்நஞ்சினால்