குலம் என- மேகக் கூட்டங்கள் போல்; சிலர் வான் வந்தார்- சில மகளிர் வான்வழியாக வந்தனர். |
இராவணன் உடலைக் காண வந்த மகளிர், மேகக் கூட்டங்களாக உருவகிக்கப்பட்டனர். அவர்கள் கூவும் ஒலியே இடி முழக்கு. அழகின் ஒளியே மின்னல். ஆபரணங்களே வானவில். கண்ணீர்த்தாரைகளே மழைத்தாரைகள் என உருவகிக்கப் பெற்றுள்ளமை காண்க. |
(229) |
9933. | தலைமிசைத் தாங்கிய கரத்தர், தாரை நீர் |
| முலைமிசைத் தூங்கிய முகத்தர், மொய்த்து வந்து |
| அலைமிசைக் கடலின் வீழ் அன்னம்போல், அவன் |
| மலைமிசைத் தோள்கள்மேல் வீழ்ந்து, மாழ்கினார். |
|
தலைமிசைத் தாங்கிய கரத்தர்- தலை மேல் சுமந்த கைகளையுடையவரும்; தாரை நீர்- கண்ணீர்த் தாரைகள்; முலை மிசைத் தூங்கிய முகத்தர்- முலைமுகட்டில் வீழுமாறு தொங்கிய முகங்களையுடையவரும்; மொய்த்துவந்து -நெருங்கி வந்து; கடலின் அலைமிசை- கடல் அலைகளின் மேல்; வீழ் அன்னம் போல்- (வந்து) வீழ்கின்ற அன்னக் கூட்டங்களைப் போல; அவன் - அந்த இராவணனின்; மலைமிசைத் தோள்கள் மேல் - மலையினும் விஞ்சிய (வன்மைத்) தோள்களின்மேல்;வீழ்ந்து மாழ்கினார்- நிலைகலங்கிச் சோர்ந்து விழுந்தனர். |
மாழ்குதல் - அறிவு நிலை கலங்கல். |
(230) |
9934. | தழுவினர் தழுவினர் தலையும் தாள்களும், |
| எழு உயர் புயங்களும் மார்பும், எங்கணும் |
| குழுவினர், முறை முறை கூறு கூறு கொண்டு |
| அழுதனர் அயர்த்தனர், அரக்கிமார்களே. |
|
அரக்கிமார்கள்- இராக்கதப் பெண்டிர்; குழுவினர் - கூட்டம் கூட்டமாய்; தலையும் தாள்களும்- தலைகளும் கால்களும்; எழு உயர் புயங்களும்- கணையமரம் ஒத்த தோள்களும்; மார்பும்- மார்புகளும்; (ஆகிய இராவணன் அங்கங்களின்) எங்கணும்- எல்லாவிடங்களிலும்; முறை முறை கூறு கொண்டனர்- முறை முறையாய் பகுத்துக் கொண்டவராகி; தழுவினர் தழுவினர் - பன்முறை தழுவி; அழுதனர் அயர்த்தனர் - அழுது மயங்கினர். |
(231) |