பக்கம் எண் :

 இராவணன் வதைப் படலம்409

முயக்கியல் முறை கெட- தழுவும் முறையெல்லாம் தவிர்த்து;
முயங்கினார்கள் - (இராவணன் உடலைத்) தழுவினார்கள்.
 

(233)
 

9937.

'அறம் தொலைவுற மனத்து அடைத்த சீதையை

மறந்திலையோ, இனும்? எமக்கு உன் வாய்மலர் 

திறந்திலை; விழித்திலை; அருளும் செய்கிலை; 

இறந்தனையோ?' என இரங்கி, ஏங்கினார். 

 

அறம் தொலைவுற- (தகாத காதலால்) தருமம் அழியுமாறு;
மனத்து அடைத்த சீதையை- உன் உள்ளத்துக்குள்ளே சிறை
வைத்திருந்த   சீதையை; இனும் மறந்திலையோ?- இறந்த
பின்பும் மறந்தாய் இல்லையோ?;   எமக்கு உன் வாய் மலர்
திறந்திலை
- (அதனால்)   எம் போன்றோர்க்கு உனது வாய்
மலரை நல்கினாய் இல்லை;   விழித்திலை- (எம்மை) கண்
எடுத்தும் நோக்கினாய் இல்லை; அருளும் செய்கிலை- (வேறு
வகையாலும்) அருள் புரிந்தாய் இல்லை; இறந்தனையோ- (நீ)
இறந்து போனாயோ; என இரங்கி ஏங்கினார் - என்று இரங்கி
ஏங்கி அழுதனர்.
 

(234)
 

மண்டோதரி இராவணன் மார்பில் விழுந்து புலம்புதல்
 

9938.

தரங்க நீர் வேலையில் தடித்து வீழந்தென,

உரம் கிளர் மதுகையான் உருவின் உற்றனள், 

மரங்களும் மலைகளும் உருக, வாய் திறந்து, 

இரங்கினள் - மயன் மகள், - இனைய பன்னினாள்: 

 

மயன் மகள்- மயனின் மகளும் (இராவணனின் பட்டத்தரசியும்
ஆகிய) மண்டோதரி; உரம் கிளர் மதுகையான் - மனத் திண்மை
வாய்ந்த வலியவனான இராவணனுடைய; உருவின்- உடலின் மேல்;
தரங்க நீர் வேலையில்- அலையெறியும் நீரினையுடைய கடலின்
மேல்; தடித்து வீழ்ந்தென- மின்னல் வீழ்ந்தது போல்;
உற்றனள்- வீழ்ந்தவளாய்; மரங்களும் மலைகளும் உருக-
(உருகும் இயல்பில்லாத) மரங்களும் மலைகளும் உருகுமாறு; வாய்
திறந்து
- வாய்விட்டு; இரங்கினாள் - அழுதவளாய்; இனைய
பன்னினாள்
- இத்தகைய மொழிகளைக் கூறினாள்.
 

(235)