தொலைவுக்குச் சென்று விட்டன; போரில் தோற்று- போரில் தோற்று; வீரம் போய் - வீரம் இழந்தும்; உரம் குறைந்தும் - வலிமையிழந்தும்; வரம் குறைந்தும்- பெற்ற வரமெல்லாம் இழந்தும்; வீழ்ந்தனையே- (போர்க்களத்தில்) வீழ்ந்து கிடக்கின்றாயே; இராவணனை ஓர் அம்போ உயிர் பருகிற்று?- இராவணனாகிய உன்னை (இராமன்) விட்ட ஓர் அம்பா உயிரையுண்டது? (நம்ப முடியவில்லை); மானுடவன் ஊற்றம் ஈதோ.- மனிதன் ஒருவனின் வலிமை இத்தகையதோ? |
(238) |
9942. | 'காந்தையருக்கு அணி அனைய சானகியார் |
| பேர் அழகும், அவர்தம் கற்பும் |
| ஏந்து புயத்து இராவணனார் காதலும், அச் |
| சூர்ப்பணகை இழந்த மூக்கும், |
| வேந்தர் பிரான், தயரதனார், பணியதனால் |
| வெங் கானில் விரதம் பூண்டு |
| போந்ததுவும், கடைமுறையே புரந்தரனார் |
| பெருந் தவமாய்ப் போயிற்று, அம்மா! |
|
காந்தையருக்கு அணி அனைய - மகளிர்க்கெல்லாம் அணி போன்ற; சானகியார் பேர் அழகும்- சீதா தேவியின் பெருமைக்குரிய அழகும்; அவர்தம் கற்பும் - அவர் (பூண்டிருந்தகற்பும்); ஏந்து புயத்து இராவணனார் காதலும் - ஓங்கிய புயங்களையுடைய இராவணனார் (சீதைமேல் கொண்ட தகாத) காதலும்; அச்சூர்ப்பணகை இழந்த மூக்கும் - அந்தச் சூர்ப்பணகை (இதனால்) இழந்து போன மூக்கும்; வேந்தர் பிரான் தயரதனார் பணியதனால்- மன்னர்க்கு மன்னனான தயரதன் ஏவலினால் வெங்கானில் விரதம் பூண்டு போந்ததுவும் - கொடிய கானகத்தே விரத வேடம் பூண்டு (இராமன்) வந்ததுவும்; கடைமுறையே- கடைசியில்; புரந்தனார் பெருந்தவமாய்ப் போயிற்று- இந்திரனார் செய்த பெருந்தவத்தின் பலனாக முடிந்துவிட்டன. |
மேற்பாடலில் ''ஓர் அம்போ இராவணனார் உயிர் பருகிற்று?'' என்ற வியப்புக்கு விடையாக, ''சானகியார் பேரழகும்.... விரதம் பூண்டு போந்ததுவும்'' ஆக எல்லாம் இணைத்து இராவணனார் உயிர் பருகின என்றவாறாம். காந்தையருக்கு அணி - ''மடந்தைமார்களில் திலகமே'' (கம்ப. 2072) '' பெண் அருங்கலமே'' (கம்ப. 2077) ''தெரிவைமார்க்கு ஒரு கட்டளை எனச் செய்த திருவே'' (கம்ப.2078). |