| தாழ்வு இல் கொற்றத்து அமரர்கள் தந்தனர். * |
|
தாழ்வு இல் கொற்றத்து அமரர்கள்- குறைவு படாத வெற்றியைப் பெற்றுள்ள தேவர்கள்; சூழ்கடல் புனலும் பல தோயமும்- உலகைச் சுற்றியுள்ள எழு கடல் நீரும் பிற புண்ணிய ஆற்று நீர்களும்; நீள் முடித்தொகையும் - நீண்ட கிரீடத் தொகைகளும்; பிற நீர்மையும்- பிற அரசர்க்கேற்ற ஆபரணங்களின் தன்மைகளும்; பாழி துற்று- வலிமை செறிந்த; அரி பற்றிய பீடமும் - சிங்கம் தாங்கிய பீடமாகிய சிம்மாசனமும்; தந்தனர் - கொண்டு வந்து கொடுத்தனர். |
இராவண வதத்தால் இலங்கை முழுதும் அழிந்து போன படியால் தேவர்கள் புதிதாக எல்லாவற்றையும் கொண்டு கொடுத்தனர். வேண்டியது ஒரு முடியே ஆயினும் முடித்தொகை என்றது இராவணன் பத்துத் தலைகளில் பத்து முடிகள் அணிந்திருந்தமை நோக்கிப் போலும். |
(4) |
9956. | வாச நாள் மலரோன் சொல, மான்முகன் |
| காசும் மா நிதியும் கொடு, கங்கை சூடு |
| ஈசனே முதலோர் வியந்து ஏத்திட, |
| தேசு உலாம் மணி மண்டபம் செய்தனன்.* |
|
மான்முகன் - மானின் முகம் உடையவனாகிய மயன் என்கிற தெய்வத் தச்சன்; வாச நாள் மலரோன் சொல- வாசனையுள்ள அன்றலர்ந்த தாமரை மலரில் வீற்றிருக்கின்ற பிரமதேவன் கட்டளையிட; காசும் மாநிதியும் கொடு- மணிகளையும் உயரிய பொன்னையும் கொண்டு; கங்கை சூடு ஈசனே முதலோர் வியந்திட - கங்காநதியைத் தலைமேற் சூடிக் கொண்டுள்ள சிவபெருமான் முதலான தேவர்கள் அதிசயிக்கும் படி; தேசு உலா மணி மண்டபம் செய்தனன் - ஒளி பரவுகிற அழகிய திருவோலக்க பட்டாபிஷேக மண்டபத்தைச் செய்தமைத்தான். |
மயன் மான்முகம் உடையவன் என்பதனை 'மான் முக நலத்தவன், மயன்' (கம்ப. 4578) என்பது கொண்டு அறிக. |
(5) |
9957. | மெய் கொள் வேத விதி முறை விண்ணுளோர் |
| தெய்வ நீள் புனல் ஆடல் திருத்திட, |
| ஐயன் ஆணையினால், இளங் கோளரி |
| கையினால் மகுடன் கவித்தான் அரோ.* |