ஒழுக்கத்தில் என்றும் நிலைத்து நிற்பவனே!; மூ உலகும் தொழ - மூன்று உலகத்தில் உள்ளாரும் உன்னை மதித்து வணங்குமாறு; உம்பர் தம் பெருமை- தேவர்களுடைய பெருமைக்கும்; நீதி- அரச நீதிக்கும்; அறன் வழி- தரும வழிக்கும்; பேர்கிலாது - (சிறிதும்) மாறுபடாமல்; இருமை ஏய் உரிமை அரசு- இம்மைக்குப் புகழும் மறுமைக்குப் புண்ணியமும் தரத்தக்கதாக உனக்கு உரிமையான இலங்கை அரசை; ஆளுதி- ஆள்வாயாக என்றான். |
வேள்வி முதலியவற்றால் தேவர்களை நிறைவு செய்தல் அரசர் கடனாதலின 'உம்பர்தம் பெருமை'க்கு ஒப்ப அரசு ஆளுதி என்றான். இராவணன் தேவர் சீற்றத்துக்கு ஆளாயினமை அறிக. வீடணன் சிரஞ்சீவியாதலின் 'ஈறிலா' என்னும் அடைமொழி பொருந்தியது. |
(12) |
9964. | பன்னும் நீதிகள் பல பல கூறி, 'மற்று |
| உன்னுடைத் தமரோடு, உயர் கீர்த்தியோய்! |
| மன்னி வாழ்க! என்று உரைத்து, அடல் மாருதி - |
| தன்னை நோக்கினன், தாயர் சொல் நோக்கினான்.* |
|
தாயர் சொல் நோக்கினான்- தனது சிற்றன்னையாகிய கைகேயியின் சொல்லை மனத்தின்கண் எப்பொழுதும் நினைத்துக் காத்தவனாகிய இராமபிரான்; பன்னும் நீதிகள் பல்பல கூறி- திரும்பத் திரும்ப எடுத்துரைக்கப்படும் அறவுரைகள் பற்பலவற்றை (வீடணனுக்குச்) சொல்லி; உயர்கீர்த்தியோய் - மிக்க புகழை உடைய வீடணனே! மற்று உன்னுடைத் தமரோடு- உன் இனத்தவர்களோடு; மன்னி வாழ்க- நிலைபெற்று வாழ்க; என்று உரைத்து- என்று சொல்லி; அடல் மாருதி தன்னை நோக்கினன் - வலிமை படைத்த அனுமனை (ஒன்று சொல்லுதற்காக)ப் பார்த்தான். |
முதலில் நோக்கினான் என்பது மனத்தால் நோக்குதல். மாருதியை நோக்கல் கண்ணால் நோக்குதலாம். |
(13) |
இராமன் அனுமனைச் சீதையிடம் அனுப்பல் |
9965. | இப் புறத்து, இன எய்துறு காலையில், |
| அப் புறத்ததை உன்னி, அனுமனை |
| 'துப்பு உறச் செய்ய வாய் மணித் தோகைபால் |
| செப்புறு, இப்படிப் போய்' எனச் செப்பினான். |