| ஆழி ஆன அரக்கனை ஆரியச் |
| சூழி யானை துகைத்தது, சோபனம்!' |
|
ஏழை- பேதமை என்னும் அணிகலன் உடையாளே!; சோபனம்- மிக்க மங்களம் உண்டாகட்டும்; ஏந்திழை- தரித்த அணிகலன்களை உடையாளே!; வாழி- வாழ்வாயாக; ஆரிய சூழி யானை- மேன்மை மிக்கவனாகிய இராமபிரான் என்கிற முகபடாம் அணிந்த யானை; ஆழி ஆன அரக்கனை- தீமைக்கு வரம்பாகிய இராவண ராக்கதனை; துகைத்தது- அழித் தொழித்தது; சோபனம்- (இனி உனக்கு) மங்களம் உண்டாகட்டும் (தொடரும்). |
'சோபனம்' என்பது மகிழ்ச்சியைத் தெரிவித்து வாழ்த்தும் சொல். அது பன்முறை வந்து மங்கல வாழ்த்தாக ஆயிற்று. |
(16) |
9968. | பாடினான் திரு நாமங்கள்: பல் முறை |
| கூடு சாரியின் குப்புற்றுக் கூத்து நின்று |
| ஆடி, அங்கை இரண்டும் அலங்குறச் |
| சூடி நின்றனன், குன்று அன்ன தோளினான். |
|
குன்று அன்ன தோளினான் - மலை போன்ற கோள்களை உடையவனாகிய அனுமான்; திரு நாமங்கள் பாடினான் - இராமன் திருப்பெயர்களைப் பாடிக் கொண்டு; பல்முறை கூடுசாரியின் குப்புற்று- பல தடவை இடம் வலமாகச் சென்று குதித்து; கூத்து நின்று ஆடி- ஆட்டம் ஆடுதலைச் செய்து; அங்கை இரண்டும் - தன் அழகிய கை இரண்டையும்; அலங்கு உற சூடி நின்றனன்- மாலை போல் தலைமேல் வளைவாகச் சூடிக் கொண்டு நின்றான். |
அலங்கல் என்பது மாலையாதலின் 'அலங்கு உற' என்பது, மாலை போல் பொருந்த இரண்டு கைகளையும் தலைக்கு மேல் கூப்பியது தலையைச் சுற்றிய மாலை போல் ஆயிற்று என்பதாம். மகிழ்ச்சி மிகுதியில் அங்கும் இங்கும் சுற்றிக் கூத்தாடல் மரபு. |
(17) |
9969. | 'தலை கிடந்தன, தாரணி தாங்கிய |
| மலை கிடந்தனபோல்; மணித் தோள் எனும் |
| அலை கிடந்தன; ஆழி கிடந்தென, |
| நிலை கிடந்தது, உடல் நிலத்தே' என்றான். |