இலாது நெடிது இருந்தாள்- இத்தகையதான இந்த வார்த்தையைச் சொல்ல வேண்டும் என்கின்ற நினைவு இல்லாமல் நெடுநேரம் சும்மா இருந்தாள். |
மகிழ்ச்சி மிகுதியால் பேச ஆற்றாதவளானாள். பிறந்த குடிக்கும், புகுந்த குடிக்கும் புகழ் தேடினள் ஆதலின் 'மனையின் மாசு துடைத்த மனத்தினாள்' என்றார். |
(24) |
9976. | ''யாது இதற்கு ஒன்று இயம்புவல்?'' என்பது |
| மீது உயர்ந்த உவகையின் விம்மலோ? |
| தூது பொய்க்கும் என்றோ?' எனச் சொல்லினான், |
| நீதி வித்தகன்; நங்கை நிகழ்த்தினாள்: |
|
நீதி வித்தகன்- நீதி வழியில் தவறாது நடக்கும் திறமை உடைய அனுமன்; (பிராட்டி ஒன்றும் கூறாது இருந்தமை நோக்கி இதற்குக் காரணம்) இதற்கு யாது ஒன்று இயம்புவல் என்பது- இந்த அநுமன் வார்த்தைக்கு என்ன பதில் கூறுவேன் என்று; மீது உயர்ந்த உவகையின் விம்மலோ- மேல் எழுந்த மகிழ்ச்சிப் பெருக்கினாலா? (அல்லது);தூது பொய்க்கும் என்றோ- (இந்த அநுமன்) சொல்லிய செய்தி பொய்யாயிருக்கும் என்று கருதியோ? எனச் சொல்லினான் - என்று சொன்னான்; (அது கேட்ட) நங்கை நிகழ்த்தினாள்- சீதை பின்வருமாறு சொல்லலானாள். |
(25) |
அனுமனுக்குச் சீதையின் பதில் |
9977. | 'மேக்கு நீங்கிய வெள்ள உவகையால், |
| ஏக்கமுற்று, ''ஒன்று இயம்புவது யாது?'' என |
| நோக்கி நோக்கி, அரிது என நொந்துளேன்: |
| பாக்கியம் பெரும் பித்தும் பயக்குமோ? |
|
மேக்கு நீங்கிய வெள்ள உவகையால்- தனக்கு மேற்பட்டதொன்றிலாத மகிழ்ச்சிப் பெருக்கினால்; ஏக்கம் உற்று- (என்ன பேசுவது என்று) திகைப்படைந்து; இயம்புவது ஒன்று யாது யாது என நோக்கி நோக்கி- சொல்லும் வார்த்தை இதுவா இதுவா என்று சிந்தித்துச் சிந்தித்து; அரிது என நொந்துளேன்- மறுமொழி கூறுதல் இயலாது என்று மனம் வருந்தி யுள்ளேன்; பாக்கியம் பெரும்பித்தும் பயக்குமோ?- (ஒருவர்க்கு வரும்) நற்பேறு பெரிய மனத்தடுமாற்றத்தையும் தரவல்லதோ? |