மகிழ்ச்சி மிகுதியால் பித்தேறினாள் என்க. |
(26) |
9978. | 'முன்னை, ''நீக்குவென் மொய் சிறை'' என்ற நீ, |
| பின்னை நீக்கி, உவகையும் பேசினை; |
| ''என்ன பேற்றினை ஈகுவது?'' என்பதை |
| உன்னி நோக்கி, உரை மறந்து ஓவினேன். |
|
முன்னை- (அநுமனே!) முன்பு; மொய்சிறை நீக்குவென் என்ற நீ - நெருக்கிடும் அரக்கர் சிறையிலிருந்து உன்னை விடுவிப்பேன் என்று (தூது வந்த போது) சொல்லிய நீ; பின்னை நீக்கி உவகையும் பேசினை- இப்பொழுது சிறையிலிருந்து விடுவித்து மகிழ்ச்சி மேலிட்டு மங்கல வார்த்தையும் கூறினாய்; என்ன பேற்றினை ஈகுவது என்பதை உன்னி நோக்கி- (உனக்கு) என்ன பாக்கியத்தைத் தருவது என்பதை நினைத்துப் பார்த்து (எதுவும் பொருந்தி வாராமையால்); உரை மறந்து ஒவினேன் - பேச இயலாமல் செயலற்றேன். |
(27) |
9979. | 'உலகம் மூன்றும் உதவற்கு ஒரு தனி |
| விலை இலாமையும் உன்னினென்; மேல் அவை |
| நிலை இலாமை நினைந்தனென்; நின்னை என் |
| தலையினால் தொழவும் தகும் - தன்மையோய்! |
|
தன்மையோய்! - சிறந்த பண்புகளை உடையவனே!; உலகம் மூன்றும் உதவற்கு ஒரு தனி விலை இலாமையும் - (நீ செய்த உதவிக்குக் கைம்மாறாக) முன்று உலகங்களையும் உதவலாம் என்றால் அவை அவ்வுதவிக்கு ஒப்பற்ற ஈடாக ஆகாமையை அறிந்தேன்; மேல் அவை நிலை இலாமை நினைந்தனன்- அதன் மேலும் அவ்வுலகங்கள் (நீ செய்த உதவி போல்) நிலைத்த தன்மை உடையன அல்ல என்பதை நினைந்தனன் (வேறு செய்வது ஒன்று இன்மையால்); நின்னை என் தலையினால் தொழவும் தகும் - உன்னை என்னுடைய தலையால் தொழுதலே செய்யத் தகுவதாகும். |
''தொழவே தகும்'' என்னும் பாடம் சிறப்புடையது - 'தொழவும் தகும்' என்பதனுள் உம்மை பொருட்சிறப்பின்று ஆதலின். உலகம் அழிந்தபின்னும் நிலைத்து நிற்கும் பேருதவிக்கு அழிந்து போகும் 'நிலையிலா உலகங்கள் ஈடாகாமை நினைந்தாள் ஆயிற்று. |
(28) |