பக்கம் எண் :

434யுத்த காண்டம் 

9980.

'ஆதலான், ஒன்று உதவுதல் ஆற்றலேன்: 

'யாது செய்வது?'' என்று எண்ணி இருந்தனென்: 

வேத நல் மணி வேகடம் செய்தன்ன 

தூத! என் இனிச் செய் திறம்? சொல்' என்றாள். 

 

வேத   நல்   மணி   வேகடம்   செய்தன்ன   தூத-
துளைத்துபயோகிக்கும்   நல்ல   இரத்தினத்தைச்  சாணையிட்டு
மெருகிட்டு  துடைத்து  வைத்தாற் போன்ற  உத்தம குணங்களை
உடைய தூதனாகிய அனுமனே!; ஆதலான் - இக்காரணங்களால்;
ஒன்று உதவுதல் ஆற்றலேன் - பொருத்தமானதொரு பொருளை
உனக்குக் கைம்மாறாகக்  கொடுக்க   இயலாதவளாக   ஆனேன்;
'யாது செய்வது'  என்று  எண்ணி   இருந்தனென் -   இனி
இவனுக்கு வேறு என்ன செய்யலாம்  என்று   நினைத்துச் சும்மா
இருந்தேன்; இனிச்  செய்திறம்   என்? சொல் - இனி   நான்
செய்யும் செயல் யாது சொல்வாயாக.
 

வேதம் - தொளையிடுதல் (வடசொல்) வேகடம் செய்தல் -
சாணை பிடித்தல், பட்டை தீட்டுதல் எனினும் ஆம்.
 

(29)
 

அனுமன் வேண்டுகோளைச் சீதை மறுத்தல்
  

9981.

'எனக்கு அளிக்கும் வரம், எம்பிராட்டி! நின் 

மனக் களிக்கு மற்று உன்னை அம் மானவன் - 

தனக்கு அளிக்கும் பணியினும் தக்கதோ? - 

புனக் களிக் குல மா மயில் போன்றுளாய்!' 

 

எம்பிராட்டி- எம் தலைவியே!; புனக் களிக்குல மாமயில்
போன்றுளாய்
-  காட்டின்கண்  மகிழ்ச்சி    மிகுந்த   உயர்ந்த
சாதியைச்  சேர்ந்த    மயிலைப்    போன்றவளே!;  எனக்கு
அளிக்கும் வரம்
- நீ எனக்குக்  கொடுத்தருளும்  வரமானது;
நின் மனக்களிக்கு மற்று உன்னை அம்மானவன் தனக்கு
அளிக்கும்    பணியினும்    தக்கதோ?
-    உன்னுடைய
மனமகிழ்ச்சிக்கேற்ப   உன்னை    அப்பெருமை    படைத்த
இராமபிரானிடத்தில் கொண்டு    சேர்ப்பதைக்    காட்டிலும்
சிறந்ததான வேறு ஒன்று இருக்கிறதா?
 

மானவன் - பெருமையுற்றவன். மானம் என்பதன் அடியாக
வந்த  சொல். இனி,  மானவன் -    மனுவினது    குலத்திற்
பிறந்தவன்  என்று  வடசொல்   முடிபாகக்  கொள்ளுதலும்
கூடும். தத்திதாந்த நாமம் என்பர்.
 

(30)