9982. | என உரைத்தது, 'திரிசடையாள், எம் மோய்! |
| மனவினில் சுடர் மா முக மாட்சியாள் |
| தனை ஒழித்து, இவ் அரக்கியர்தங்களை |
| வினையினில் சுட வேண்டுவென், யான்' என்றான்.* |
|
என உரைத்து- என்று (அனுமன்) சொல்லி (மேலும்); எம்மோய்- எமது தாயே!; யான் மனவினில் சுடர் மாமுக மாட்சியாள் திரிசடையாள் தனை ஒழித்து- நன்மணிக்கற்கள் போல ஒளிவிடும் முகமலர்ந்த தோற்றமுடையாளாகிய திரிசடை நீங்கலாக; இவ்வரக்கியர் தங்களை- (உங்களைப் பயமுறுத்தித் துன்பம் செய்த) இந்த அரக்கியர்களை; வினையினில் சுட வேண்டுவன் - கொடிய செயலால் சுட்டெரிக்க விரும்புகிறேன். |
மனவு - மணிகளுக்கான பொதுப்பெயர். மனவினில் என்பதற்கு 'மனம் போல' எனப் பொருள் உரைத்து, தூயதாகிய தன் மனம் போல ஒளிவிட்டுப் பிரகாசிக்கும் முகம் உடையாள் திரிசடை எனினும் ஆம். வினையினில் - வினை போல; தப்பாது கெடுத்தற்கு உவமை. |
(31) |
9983. | 'உரை அலா உரை உன்னை உரைத்து, உராய் |
| விரைய ஓடி, ''விழுங்குவம்'' என்றுளார் |
| வரை செய் மேனியை வள் உகிரால் பிளந்து, |
| இரை செய்வேன், மறலிக்கு, இனி' என்னுமால். |
|
உன்னை உரை அலா உரை உரைத்து- உன்னைச் சொலத்தகாத வார்த்தைகளால் வைது; விரைய ஓடி உராய விழுங்குவம் என்றுளர் - வேகமாக ஓடிவந்து மேல் விழுந்து உன்னை விழுங்கிவிடுவோம் என்றுள்ளவர்களாகிய இவ்வரக்கியரது; வரைசெய் மேனியை- மலை போன்ற உடம்பை; வள் உகிரால் பிளந்து- வளவிய என் கை நகத்தால் பிளந்து; மறலிக்கு இரை செய்வேன் இனி- யமனுக்கு இரையாக ஆக்குவேன் இனிமேல்; என்னும் - என்று சொல்லுவான். |
(32) |
9984. | 'குடல் குறைத்து, குருதி குடித்து, இவர் |
| உடல் முருக்கியிட்டு உண்குவேன்' என்றலும், |
| அடல் அரக்கியர், 'அன்னை! நின் பாதமே |
| விடலம்; மெய்ச் சரண்' என்று விளம்பலும்.* |