10265. | என்று உரைத்து, அனுமனை இறுகப் புல்லினான்; |
| ஒன்று உரைத்து இறுப்பது என், உனக்கும், |
| எந்தைக்கும், |
| இன் துணைத் தம்பிக்கும், யாய்க்கும்?' என்றனன் - |
| குன்று இணைத்தன உயர் குவவுத் தோளினான். |
|
என்று உரைத்து- என்று இவ்வாறு கூறி; குன்று இணைத்தன உயர் குவவுத் தோளினான் - இரண்டு குன்றுகள் நெருங்கினாற் போன்ற உயர்ந்து திரண்ட தோளினை உடைய இராமன்; அனுமனை இறுகப் புல்லினான் - அனுமனை நன்கு தழுவி; உனக்கும் எந்தைக்கும் இன்துணைத் தம்பிக்கும் யாய்க்கும் - அனுமனாகிய உனக்கும், சத்திய வாக்கினராகிய தசரத சக்கரவர்த்திக்கும் என்னை உடன் பிரியாத இனிய துணையாகிய இலக்குவனுக்கும் தாயாகிய கோசலைக்கும்; ஒன்று உரைத்து இறுப்பது என் - நன்றியாக ஒரு வார்த்தை சொல்லி முடிப்பது எவ்வாறு இயலும்? என்றனன்; |
தம்பி என்பது பரதன் என்பாரும் உளர் - இன்துணைத் தம்பி என்பது இலக்குவனைக் குறித்தலே சிறந்ததாம். |
(314) |
10266. | ஈடுறு வான் துணை இராமன் சேவடி |
| சூடிய சென்னியன், தொழுத கையினன், |
| ஊடு உயிர் உண்டு என உலர்ந்த யாக்கையன், |
| பாடு உறு பெரும் புகழ்ப் பரதன் தோன்றினான். |
|
பாடு உறு பெரும் புகழ்ப் பரதன் - பெருமை பொருந்திய சிறந்த புகழை உடைய பரதன்; ஈடு உறு வான் துணை இராமன் சேவடி- தனக்குத்தானே சமானமாய சிறந்த துணையாக உள்ள இராமன் திருவடி நிலைகளை; சூடிய சென்னியன் - சென்னி மேல் அணிந்து கொண்டவனாய்; தொழுத கையினன் - கைகளால் வணங்கிக் கொண்டு; ஊடு உயிர் உண்டு என உலர்ந்த யாக்கையன் - உள்ளே உயிரும் இருக்கிறது என்று கண்டார் கருதலாம்படி வற்றிப் போன உடம்புடையவனாகி; தோன்றினான் - (இராமன முன்னாலே) வந்தான். |
இராமன்பால் முன்பு பெற்ற பாதுகைகளைத் தலை மேற் சூடி வந்தான் என்பதாகும். |
(315) |