இராமன் பரதனைக் கண்டு மகிழ்தல் |
10267. | தோன்றிய பரதனைத் தொழுது, தொல் அறச் |
| சான்று என நின்றவன், 'இனைய தம்பியை, |
| வான் தொடர் பேர் அரசு ஆண்ட மன்னனை, |
| ஈன்றவள் பகைஞனை, காண்டி ஈண்டு' எனா, |
|
தொல் அறச்சான்று என நின்றவன்- பழமையான அறத்துக்குச் சாட்சியாக உள்ளவனாகிய அநுமான்; தோன்றிய பரதனைத் தொழுது - அங்கே வந்த பரதனை வணங்கி (இராமனுக்கு); இனைய தம்பியை- இத்தகைய உடன்பிறப்பை; வான் தொடர் பேரரசு ஆண்ட மன்னனை - மிக உயர்ந்த பாரம்பரியம் உள்ள பெரிய சூரிய குல ஆட்சி செய்த அரசனை; ஈன்றவள் பகைஞனை - பெற்ற தாயாகிய கைகேயிக்கு எதிரியாக இருந்தவனை; ஈண்டு காண்டி- இங்கே காண்பாயாக; எனா- என்று; தொடரும் |
(316) |
10268. | காட்டினன் மாருதி; கண்ணின் கண்ட அத் |
| தோட்டு அலர் தெரியலான் நிலைமை சொல்லுங்கால், |
| ஓட்டிய மானத்துள் உயிரின் தந்தையார் |
| கூட்டு உருக் கண்டன்ன தன்மை கூடினான். |
|
மாருதி காட்டினன் - அநுமன் காட்டினான்; கண்ணின் கண்ட அத் தோட்டலர் தெரியலான் நிலைமை சொல்லுங்கால் - கண்ணாலே பரதனைப் பார்த்த அந்த இதழ் மலர்ந்த மாலை அணிந்த இராமனது தன்மையைத் தெரியச் சொல்லுவோமானால்; ஒட்டிய மானத்துள் - வானின்றிழிந்து வந்த விமானத்தில்; உயிரின் தந்தையார் கூட்டு உரு - உயிர் போலச் சிறந்த தன் தந்தையாகிய தசரத சக்கரவர்த்தியின் பொருந்திய வடிவத்தை; கண்டன்ன தன்மை கூடினான்- இலங்கையில் இராவணவதத்தின்பின் கண்டது போன்ற தன்மையை அடையப் பெற்றான். |
பரதனைத் தந்தையாக இராமன் காணவும், இராமனைத் தந்தையாகப் பரதன் காணவும் இக்காட்சி அமைந்து ஒருவர் ஒருவரிற் புகுந்தாற் போன்று அமைந்து நலம் செய்கிறது. |
(317) |