பக்கம் எண் :

588யுத்த காண்டம் 

பிரிவால்      மெலிந்து   நுணுகிய    பரத   சத்துருக்கனராய
தம்பிமார்களுக்கு அவர்கள் கண்ணிற்   கருமணியாம் பாவையாக
ஆனான். (மற்றவர்களுக்கு எல்லாம்)   நோய் உறுத்து உலந்த
யாக்கைக்கு உயிர் புகுந்தாலும் ஒத்தான்
- நோய் துன்புறுத்த
அதனால் வற்றிப் போன   உடம்பிற்குள்   மீண்டும்   உயிர்வந்து
புகுந்தாற் போலும் தன்மையாக ஆனான்.
 

'கன்று பிரி காரா' (கம்ப. 2367) என்பது  இராமனைப்  பிரிந்த
தாயர் நிலைக்கு முன்னும் கூறப்பட்டது. 'மாயையின்  பிரிந்தார்க்கு'
என்பதற்கு  மாயையிலிருந்து  நீங்கியவர்களுக்கு   என்று  நீக்கப்
பொருள்  கூறாமல்  'மாயையால்'  என  ஏதுப் பொருள் கொண்டு,
மாயையால் பிரமத்தை விட்டுப் பிரிந்தவர்கள் மீண்டும் பிரமத்தோடு
கூடியது போல் என அத்வைத வேதாந்தப் பொருள் கூறல் மிகவும்
பொருந்தும்  என்பது  என் குருநாதர் மகாவித்துவான் மயிலம், வே.
சிவசுப்பிரமணியம்  கருத்து.  'மனோலயம்' என்பது மனமற்ற இடம்
என்பதாகி பரப்பிரம்ம எனப் பொருள் தந்து 'முத்தி நிலை' குறித்தது.
'ஆய் நுணுக்கம்' '' ஆய்தல்  ஓய்தல்  நிகழ்த்தல்  சாய்  ஆவயின்
நான்கும்  உள்ளதன்  நுணுக்கம்''  என்பது தொல்காப்பியம். (தொல்.
சொல். 25)
 

(319)
 

10271.

எளிவரும் உயிர்கட்கு எல்லாம் ஈன்ற தாய் எதிர்ந்தது  

ஒத்தான்;

அளி வரும் மனத்தோர்க்கு எல்லாம் அரும் பத 

அமுதம் ஆனான்;

ஒளி வரப் பிறந்தது ஒத்தான், உலகினுக்கு; 

ஒண்கணார்க்குத்

தெளிவு அருங் களிப்பு நல்கும் தேம் பிழித் தேறல் 

ஒத்தான்.

 

எளிவரும் உயிர்கட்கு எல்லாம்- எளிமை நிலையடைந்த
உயிர்களுக்கு   எல்லாம்;  ஈன்ற தாய் எதிர்ந்தது ஒத்தான் -
பெற்ற அன்னை வந்து கிடைத்தது போல ஆனான்;அளி வரும்
மனத்தோர்க்கு எல்லாம் அரும் பத அமுதம் ஆனான்
- அன்பு
பொருந்திய   மனம்  உடையவர்களுக்கெல்லாம் கிடைத்தற்கரிய
தேவர் அமுதம் கிடைத்தாற் போன்றவனாக ஆனான்;உலகினுக்கு
ஒளி வரப் பிறந்தது ஒத்தான்
- உலகத்திற்கு  இருளை  நீக்கி
ஒளி தோன்றியது போல ஆனான்;  ஒண் கணார்க்குத்  தெளிவு
அருங்களிப்பு நல்கும் தேம்பிழித் தேறல் ஒத்தான்
- ஒள்ளிய
கண்களை  உடைய   மகளிர்க்குத்   தெளிவற்ற  மயக்கச்செருக்கு
தருகின்ற தேனினது பிழிந்த தெளிவைப் போன்றான்.