செச்சை- செஞ்சாந்தக் குழம்பு பூசப் பெற்றதும்; மறு உள்ள - தழும்பு பட்டதுமான;அலங்கல் மார்பர் - மாலை சூடிய மார்பினை உடையவரும்; அறுபத்தேழ் அமைந்த கோடி- அறுபத்தேழு கோடி எண்ணிக்கையினருமாகிய;வானரத் தலைவர் யானை மேல் போனார்- வானரத் தலைவர்கள் யானை மீது ஏறிச் சென்றனர்.
(5)
10295.
எட்டு என இறுத்த பத்தின் ஏழ் பொழில் வளாக
வேந்தர்
பட்டம் வைத்து அமைந்த நெற்றிப் பகட்டினர், பைம்
பொன் தேரர்,
வட்ட வெண்குடையர், வீசு சாமரை மருங்கர்,
வானைத்
தொட்ட வெஞ் சோதி மோலிச் சென்னியர், தொழுது
சூழ்ந்தார்
நெற்றிப் பட்டம் வைத்து அமைந்த- நெற்றிப் பட்டம் தைத்து அமைக்கப்பட்ட; பகட்டினர்- யானையை உடையவரும்; பைம்பொன் தேரர் - பசும் பொன்னாலமைந்த தேரினை உடையவரும்; வட்ட வெண்குடையர் - வட்ட வடிவமான வெண் குடையை உடையவரும்; சாமரை வீசு மருங்கர் - இருபுறமும் கவரி வீசப் பெற்றவரும்; வானைத் தொட் - ஆகாயத்தை அளாவும்; வெஞ்சோதி - வெவ்விய ஒளியை உடைய; மோலிச் சென்னியர் - மகுடம் தரித்த தலையை உடையவருமான; எட்டென இறுத்த பத்தின்- எட்டென்று முடிகின்ற பத்து அதாவது பதினெட்டுப் பிரிவான; ஏழ் பொழில் வளாக வேந்தர் - ஏழு பூமிகளின் எல்லையிலுமிருந்த மன்னர்கள்; தொழுது சூழ்ந்தார்- வணங்கிச் சூழ்ந்தனர்.