முடிசூட்டு விழா நடந்தேறிய பிறகு நாள்தோறும் சீதா பிராட்டியோடு திருவோலக்க மண்டபத்தில் மன்னரும் பரிவாரச் சுற்றங்களும் புடைசூழ ஸ்ரீராமன் கொலு வீற்றிருந்து அரசு புரிதலும் அப்போது சுக்ரீவன், வீடணன், குகன் ஆகியோர் தம் சேனை சூழத் திருவோலக்க மண்டபத்துக்கு வருதலும், இராமன் அவர்களை இனிதிருக்க கட்டளையிடுதலும் இவ்வாறு இரண்டு மாதங்கள் கழிதலும் பின்னர் இராமன் மறையவர்களுக்கும் இரவலர்களுக்கும் வேண்டுவன அளித்து அனுப்பி, அரசர்களை வருக என அழைத்து அவர்கள் வந்த பின்னர் அவர்களுக்குப் பரிசுகள் அளித்து விடை கொடுத்து அனுப்புதலும், சுக்ரீவனுக்கும் அங்கதனுக்கும் அனுமனுக்கும் சாம்பனுக்கும் நீலனுக்கும் சதவலிக்கும் கேசரிக்கும் நளன், குமுதன், தாரன், பனசன் மற்றுமுள்ள அறுபத்தேழு கோடியாம் வானர சேனைத் தலைவர்க்கும் வரிசைக்கு ஒப்ப ஈந்து விடைகொடுத்தலும் வீடணனுக்கும் குகனுக்கும் அவரவர் சிறப்பிற்கேற்ப உரிய வரிசைகள் தந்து அவரவரை அவரவர்தம் நாட்டிற்குச் சென்று இனிது அரசு செய்யுமாறு பணித்து விடை கொடுத்தலும் அவர்கள் பரத, இலக்குவ, சத்துருக்கனர்களையும் வசிட்டரையும், தாயரையும், சீதாபிராட்டியையும் இராமபிரானையும் வலங்கொண்டு பணிந்து விடைபெற்றுத் தத்தம் பதியைச் சார்தலும் அவர்களையெல்லாம் அனுப்பி வைத்து, அயோத்தியில் வையகம் எல்லாம் செங்கோல் மனுநெறி முறையில் செல்ல இராமன் இனிது அரசாட்சி செய்திருத்தலும் ஆகிய செய்திகள் இப்படலத்துக் கூறப்பட்டுள்ளன. |