தாரகாட்சன், வித்யுந்மாலி, கமலாட்சன் என்ற மூவரும் தாரகாசுரனின் மக்கள், இவர்கள் தவத்தில் சிறந்தவர்கள். தவ வலிமையால் முறையே மத்திய, சுவர்க்க, பாதாளம் என்ற மூன்றிடத்திலும் ஆட்சி புரிந்தனர். மயன் என்பானைக் கொண்டு வெண்பொன், பசும்பொன், கரும்பொன் ஆகியவற்றால் அரண்கள் அமைந்த, வானில் பறக்க வல்ல, மூன்று நகரங்களையும் பெற்றிருந்தனர். பல அரக்கர்களோடு அக்கோட்டை நகரங்களோடு வானில் பறந்து தாங்கள் விரும்பியவாறு நிலத்தில் இறங்கி மக்களை அழித்துத் துன்புறுத்தினர்; தேவர்களை அச்சுறுத்தினர். ஆற்றாத அமரரும் முனிவரும் சிவனிடம் வேண்ட, சிவனார் பூமியைத் தேராக சந்திர, சூரியர்களை தேர்ச் சக்கரங்களாக, நான்கு வேதங்களையு் நான்கு குதிரைகளாக, பிரம்மனைத் தேரோட்டியாக, மேருவை வில்லாக, அதிசேஷனை நாணாக, திருமாலை அம்பின் சிறகாக, அக்கினியை அம்பின் முனையாக, வாயுவை அம்பாக மற்றைத தேவர்களை வெவ்வேறு போர்க்கருவிகளாகக் கொண்டு போர்க்குப் புறப்பட்டார். ஆனால் தாம் உதவவில்லையெனில் சிவனால் அத்தீயவர்களை வெல்ல இயலாது என எல்லோரும் தனித்தனியே நினைத்தனர். மனத்தகத்தானாகிய மறைமுதல்வன் அந்தர்யாமியாய் இருந்து உணர்ந்து புன்முறுவல் பூத்தனன். அப்புன்முறுவலே அசுரர்களின் கோட்டைகளை அழித்து பொடியாக்கியது என்பது வரலாறு. |