சூரிய குலத்துத் தோன்றலாகிய திலீபன் என்பவனின் மகன் பகீரதன். தன் மூதாதையர்கள் சாபத்தால் இறந்த செய்தியை வசிட்டர் வாயிலாகக் கேட்டு, அவர்கள் நற்கதி அடையப் பிரம்மனை நோக்கி 10,000 ஆண்டுகள் தவம் புரிந்தான். பிரம்மனோ ''நீ கங்கையையும் சிவனையும் நோக்கித் தவம் செய்து கங்கையைக் கொண்டு அவர்களின் சாம்பலை நனைத்தால் அவர்களுக்கு நற்கதி கிடைக்கும்'' என்று கூற அவ்வாறே செய்தான். கங்கை சிவன் முன் தோன்றி, ''நான் வருவதற்குத் தடையொன்றும் இல்லை, என் வேகத்தைத் தாங்கிக் கொள்வார் உண்டாயின்'' என்றாள். பிரம்மன் கட்டளைப்படி சிவனாரை நோக்கித் தவம் புரிந்தான். சிவனாரும் கங்கையின் வேகத்தைத் தாங்கிக் கொள்வதாகக் கூற, பின் சிவன் வேண்டுகோளின்படி கங்கை வானுலகினின்று பூலோகம் வருகையில் சிவனாரால் கங்கை தாங்கப் பெற்றுப் பூமி பொறுக்கும் அளவுக்குப் பூமியில் விடப்பட்டாள். கங்கையை இறந்தோர் சாம்பலில் பாய வைத்து நற்கதி பெறச் செய்தவன். இவனால் கங்கை கௌரவம் பெற்றதால் கங்கைக்குப் பாகீரதி எனப் பெயர் வந்தது. |