நீர்க்குடத்தோடு யாகசாலைக்கு வந்து கணவனாகிய சமதக்கினி முனிவர் முன் நின்றாள். நடந்தது உணர்ந்த முனிவன் முனிவு கொண்டு மனத்தால் கலக்கமுற்றாலும் கற்புக் கெட்டவளே என்ற முடிவில் தன் புதல்வர்களை அழைத்து அவளை மனச்சலனம் இன்றிக் கொல்லுங்கள் என்று ஆணையிட்டான். மூத்த பிள்ளைகள் நால்வரும் மறுத்தனர். ஐந்தாவதாக வந்த பரசுராமன் உடன்பட்டான். சொற்கேளாப் பிள்ளைகள் நால்வரையும் கற்பிழந்த மனைவியையும் கொல்லுமாறு பணித்தார். அவ்வாறே தன் மழுவால் ஐவரையும் மனச் சலனம் ஒன்றும் இன்றிக் கொன்று தந்தையை வணங்கினான். தன் சொற்கேட்ட தனயன் பால் அன்பு பூண்டு ''என் சொல் கேட்டு அரிய செயலைச் செய்தமைக்கு மகிழ்ந்தோம். ஆதலின் என்பால வேண்டும் வரம் உண்டெனின் கேட்டுப் பெறுக' என்று தந்தை கூறிய கூற்றினை பயன்படுத்தித் தனக்குத் தாயும் தமையன்மார்களும் வேண்டும் என வேண்ட அவ்வாறே பெற்று மகிழ்ந்தான் என்பது கதை. |
22. ஏழுலகும் ஒன்றான நீர் உழல் தெய்வமீன் (1841) |
பிரமனுடைய நான்கு முகங்களில் இருந்தும் நான்கு வேதங்கள் தோன்றின. தோன்றிய நான்கு வேதங்களும் ஆண் உருவத்தில் உலவி வந்தன. அக்காலத்தில் சோமுகன் என அழைக்கப் பெற்ற ஆற்றல் மிக்க அசுரன் இருந்தான். வேதங்களையும் கவர்ந்து சென்று பிரளயகால வெள்ளத்துள் மறைத்து வைத்தான். வேதங்களை இழந்த பிரமன், திருமாலிடம் முறையிட திருமால் ஒரு பெருமீனாகத் தோன்றி, பெருங்கடலுள் புகுந்து சோமுகனைக் கண்டு பிடித்துக் கொன்று வேதங்களை மீட்டுப் பிரமனிடம் சேர்ப்பித்தார். |
23. கால நேமிமேல் ஏவிய திகிரி (2083) |
நரசிங்க அவதாரத்தின்போது திருமாலால் கொல்லப்பட்டவன் இரணியன். அவனுக்குக் கால நேமி என்ற மகன் இருந்தான். அவனுக்கு நூறு தலைகளும் நூறு கால்களும் உண்டு. வரத்தால் பலம் மிகப் பெற்றவன். தேவாசுரப் போரில் அசுரர்கள் வணங்கிய போது அவர் பக்கம் சேர்ந்து தேவர்களை வென்று அடிமைப் படுத்தினான். சத்திய லோகம் சென்று பிரமனை வென்றான். எல்லாத் தேவர்களும் பிரமனை வணங்குவதற்கு மாறாகத் தன்னை வணங்க வேண்டும் என்று ஆணை |