பக்கம் எண் :

 கதைக் குறிப்புகள்765

அனுப்ப வேண்டும் என்பது முடிவு ஆயிற்று. சிவன் அகத்தியரை
அழைத்துத்  தென்திசை ஏகுமாறு   கூறியபோது அப்பகுதி மக்களின்
மொழி   தெரியாதே என்ற   போது அவர்க்குத்   தமிழ் மொழியைச்
சொல்லிக்   கொடுத்தான்  என்பதனால் இறைவன் தந்த மொழி தமிழ்
என்ற  வழக்கு வந்தது. கங்கையினிடம் சென்று காவிரியைப் பெற்றுக்
கமண்டலத்தில்   எடுத்து வந்தார். அப்போது தென்னகத்தில் வறட்சி
நிலவியது. அதனை நீக்கப் பிள்ளையாரை வேண்டினர். குடகு மலையில்
காலைக்   கடன்களை   ஆற்ற,    கமண்டலத்தை     ஒரு பக்கமாக
வைத்துவிட்டுக்   காலைக்   கடன்களில்   ஈடுபட்டு    இருந்தபோது,
பிள்ளையார் காக்கை வடிவில் கமண்டலத்தில் அமர்ந்தார். காக்கையை
விரட்ட அகத்தியர் கையை அசைத்துப் 'போ' எனக் குரல் எழுப்பினார்.
காவிரி வரும் போதே, '' என்று என்னைப் 'போ' என்று சொல்கின்றாயோ
அன்றே உங்களை விட்டுப் பிரிவேன்'' என்ற நிபந்தனையோடு வந்தாள்.
ஆகவே, போ என்றவுடன் காவிரி கமண்டலத்தை விட்டுப் புறப்பட்டுப்
பெரு வெள்ளமாகப் புறப்பட்டாள் என்றும் காக்கையே கவிழ்த்து விட்டது
என்றும் கூறி, காக்கையின் காரணமாகக் காவிரி எனப் பெயர் பெற்றது.
அது தென்னகம் வரக் காரணமாக இருந்தவர் அகத்தியர் என்பதனால்
காவிரி கொணர்ந்தவர் அகத்தியர் எனவும் கூறப்படுகின்றது.
 

31. அகத்தியர் வாதாவிதன் காயம் இனிதுண்ட 

என்பதில் அடங்கியுள்ள வரலாறு (2668)
 

அஜமுகிக்குத்  துர்வாசர் மூலம்  பிறந்த   வில்வலன்,   வாதாபி 
என்பவர்கள் அசுரர்கள்; தவம் செய்து  மந்திர வலிமை பெற்றவர்கள்;
இறந்தாரையும் உயிர்ப்பிக்கும் வல்லமை வாய்ந்தவர்கள். மூத்தவனாகிய
வில்வலன் நாள்தோறும் பார்ப்பன வடிவம் பூண்டு தன் பெற்றோர்க்குத்
திதி  என்று கூறி  முனிவர்களை  அழைத்துத் தன் தம்பி வாதாபியை
ஆட்டுருவம்   பெறச் செய்து   அதனை  வெட்டி விருந்து வைப்பான்.
அவர்களும்  மகிழ்ந்து  உண்பர். உண்டு   முடிந்த பின்பு, 'வாதாபி, வா
வெளியே'  என்பான். வாதாபியோ  மந்திரத்தின்  வன்மையால்  உயிர்
பெற்று, உண்ட முனிவர்களின் வயிற்றைக்  கிழித்துக்  கொண்டு வெளி
வருவான்.  இறந்த  முனிவர்களின்  உடல்களை   இருவரும்  உண்டு
மகிழ்வர். இவர்களின் இச்செயலால் அழிந்து போன முனிவர்கள்