பிரமனின் பிள்ளைகளில் ஒருவன் புலத்தியன் என்ற முனிவன், அவன் மேருமலைச் சாரலில் தவம் புரிந்து வேதம் படித்துக் காலம் கழித்தனன். அவன் இருந்த இடம் மலர் நிறை மரங்களும் செடிகளும் சுனைகளும் நிரம்பிய இடம். ஆதலால் மகளிர்க்கு மகிழ்வாக நீராடவும், பொழுது போக்கவும் இனிய இடமாக இருந்தது. அவர்கள் அவ்வாறு வந்து போய்க் கொண்டிருந்தது புலத்தியன் பணிகட்கு இடையூறாக இருந்தது. முனிவன் வெகுண்டு ''இன்று முதல் என் முன்னர் எப்பெண் தோன்றினும் அவள் உடன் கருவுறுவாளாக'' என்ற சாபத்தைக் கொடுத்தான். அறிந்த பெண்கள் வராமல் நின்றனர். இதனை அறியாத திருணபிந்து என்ற ராஜரிஷியின் மகள் சோலையின் அழகை அனுபவிக்க வந்தாள். புலத்தியன் பார்வையில் பட்டாள். கருவுற்றாள். வேறு வழியின்றி அவளின் தந்தை அப்புலத்திய முனிவனுக்கே அவளைத் திருமணம் செய்வித்தான். மனைவியைப் பார்த்து ''நான் வேதம் ஓதிக் கொண்டிருக்கையில், நான் இட்ட சாபம் அறியாமல் என்முன் வந்து நின்று, சாபத்தினாலே கருவுற்றாய். எனவே, உன்னிடம் பிறக்கும் பிள்ளைக்கு ''விஸ்ரவசு'' என்று பெயர் இடுவாயாக'' என்று பணித்தனன். அவ்வாறே பிறந்த குழந்தைக்கு விஸ்ரவஸ் எனப் பெயர் வைத்தனள். விஸ்ரவசு என்றால் ஆரணமறையோன் என்று பொருள். இவன் வழித் தோன்றல்களே இராவணாதியர். எனவே இராவணன் சூர்ப்பணகை தந்தை வழியால் புலத்தியர் மரபினர் ஆயினர். |