தாருக வனத்து முனிவர்கள் ''கடமைகளை ஒழுங்குறச் செய்து அறவோர்களாக வாழ்ந்தாலே போதும். கடவுளை வணங்க வேண்டியது இல்லை'' என்று செருக்கோடு வாழ்ந்தனர். அவர்தம் மனைவியர் கணவனே தெய்வம் என்று கற்பொழுக்கத்தோடு வாழ்ந்தனர். இவர்களைச் சோதிக்க எண்ணிய சிவனும், திருமாலும் முறையே பிட்சாடனர் பெண் உருவங்கொண்டு தாருக வனத்து முனிவர்கள், பத்தினியார் முன்பு சென்றனர். அப்பெண்ணின் அழகில் மயங்கி முனிவர்கள் தம் வசம் இழந்தனர். பிச்சைக்காரன் உருவில் பேரழகோடு வந்த சிவனின் அழகில் முனிவர்களின் மனைவியர் மயங்கினர். இருசாராரும் தம் தம் நிலையில் தாழுமாறு செய்தனர். தாங்கள் கெடுவதற்குக் காரணமான திருமாலை விட்டுவிட்டுத் தங்கள் மனைவிமார்கள் மனங் கெடுவதற்குக் காரணமான சிவன்மீது வெகுண்டு அபிசாரயாகம் செய்தனர். அவ் யாகத்தினின்றும் பாம்புகள், பூதங்கள், மான், புலி, யானை, வெண்டலை போல்வன தோன்றின. இவற்றை யெல்லாம் சிவன் தனக்கு அணிகலன்களாகவும், கருவிகளாகவும், ஆடையாகவும், போர்வையாகவும் மாற்றி ஏற்றனன். அவற்றால் சிவனார்க்கு யாதொரு இடையூறும் ஏற்படவில்லை. இவற்றுள் புலித்தோல் சிவனாரின் ஆடையாய் அமைந்தது. யாகத் தீ அவன் கையில் எப்போதும் எரியும் கனலாய்ச் சென்று அமைந்தது. |