கவந்தன் முன்பு விஸ்வாவசு என்ற பெயரினன், தனுவின் மகன்; அழகன், விஸ்வாவசு தன் அறிவின்மையால் அரக்க மனம் கொண்டு கவந்தன் என்ற அரக்க உருவோடு வனம் வாழ் முனிவர்க்கும் தபோதனர்க்கும் ஊறுகள் விளைத்து மகிழ்ந்தான். அவர்களின் பொருள்களைச் சூறையாடிச் சூரத் தனத்தைக் காட்டி வந்தான். அவ்வனத்தில் ஸ்தூல சிரஸ் என்ற வன்மை மிக்க முனிவர் இருந்தார். அவரின் வன்மையறியா இவன் அவருடைய உணவினைப் பறித்துச் சிதறினன். வெகுண்ட அவர், ''இவ்வுருவமே உனக்கு நிலைக்கக் கடவது'' எனச் சபித்தார். தருக்கு நீங்கித் தன்னுணர்வு பெற்ற விஸ்வாவசு முனிவர் தாளினைப் பணிந்து சாப நீக்கத்திற்கு வழி வேண்டி நின்றனன். அவரோ ''அப்பா! திருமால் இராமாவதாரத்தில் இங்கு வந்து உன் தோள்களைத் துணித்து, உன் உடலைக் கொளுத்துவான். அப்போது உன்றன் இவ் உருவம் நீங்கும்'' என்றார். இவன் பிரமனை நோக்கி நீண்டகாலம் தவம் செய்து பூரண ஆயுள் பெற்றான். அதனால் செருக்குற்ற கவந்தன் இந்திரனோடு போர் தொடுத்தான். இந்திரன் இவனின் தலையையும், இடுப்பின் கீழ்ப் பகுதியையும் இவனின் உடலில் ஒடுங்கச் செய்தான். தலையும், காலும் இழந்த முண்டமாயினும் வர பலத்தால் உயிரோடு இருந்தனன். இந்திரனின் காலில் விழுந்து 'நான் இயங்காத நிலையில் உணவுக்கென் செய்வேன்?' என வேண்ட அவனோ யோசனை தூரம் நீளும் கைகளையும் கோரைப் பற்களையும் இவனுக்குத் தந்து ''காட்டில் கிடைக்கிற உயிரினங்களைக் கரங்களை நீட்டிப் பிடித்துக் கோரைப் பற்களால் உண்டு வாழ்க'' என அருள் பாலித்தான்., ''இராம இலக்குவர்கள் இங்கு வரும் |