வானவர்- தேவர்கள்; நடுங்கி- (அச்சத்தால்) நடுங்கி, ஓடுவான் முயல்வார் - ஓடத் தொடங்கியவர்கள்; நஞ்சு அடை கண்டனை- நஞ்சு தங்கிய கழுத்துடைய சிவபிரானை (அடைந்து) நம்ப - (எம்) தலைவனே; யாம் கரந்து ஒடுங்கி உறைவிடம் அறிகிலம் - நாங்கள் (இந்த அரக்கரிடமிருந்து தப்பி) மறைந்து ஒடுங்கி வாழ்வதற்கு ஏற்ற இடத்தை அறிகிலேம்; உயிரைப் பிடுங்கி உண்குவர் - நாங்கள் மறைந்து ஒடுங்கி விடவில்லையென்றால் எம் உயிரைப் பறித்து உண்டுவிடுவார்கள்; இவர் பெருமை- இவ் அரக்கர்களின் பெருமையை; பண்டு அறிந்தார் யார்- முன்பு தெரிந்தவர்கள் யார்? (எவரும் இல்லை); முடிந்தது எம் வலி என்றனர்- எங்கள் வலிமையெல்லாம் அழிந்தது என்றனர். |
(24) |
| 9323. | 'ஒருவரைக் கொல்ல, ஆயிரம் இராமர் வந்து, |
| ஒருங்கே |
| இருபதிற்றிரண்டு ஆண்டு நின்று அமர் செய்தால், |
| என் ஆம்? |
| நிருதரைக் கொல்வது, இடம் பெற்று ஓர் இடையில் |
| நின்று அன்றோ? |
| பொருவது, இப் படை கண்டு, தம் உயிர் பொறுத்து |
| அன்றோ?' |
| |
ஒருவரைக் கொல்ல- இந்த அரக்கருள் ஒருவனைக் கொல்ல வேண்டுமென்றாலும்; ஆயிரம் இராமர் ஒருங்கே வந்து- ஆயிரம் இராமர்கள் ஒன்றாகச் சேர்ந்து வந்து; இரு பதிற்றிரண்டு ஆண்டு - இருபத்து நான்கு ஆண்டுக்காலம்; நின்று அமர் செய்தால் என் ஆம்- புறமுதுகு இட்டு ஓடாமல் உறுதியாக நிலைத்து நின்று போர் செய்தாலும் என்ன விளைவு ஆகப்போகிறது? (ஒன்றும் செய்துவிட முடியாது); நிருதரைக் கொல்வது- அரக்கர்களைக் கொல்வதென்பது; இடம் பெற்று ஓர் இடையில் நின்று அன்றோ - நிற்பதற்குப் போர்க்களத்தில் இடம் பெற்று, அந்த ஓரிடத்தில் உறுதியாக நின்றபிறகு அன்றோ? (நிற்பதற்கு இடம் கிடைக்கவும் போவதில்லை; ஓர் இடத்தில் நின்று போர் செய்ய முடியப்போவதும் இல்லை என்பதாம்.) பொருவது - போர் செய்வதென்பது; இப்படை கண்டு- இந்தப் படையைக் கண்ட பிறகும்; தம் உயிர் பொறுத்து அன்றோ?- தங்கள் உயிரைத் தாங்கி நிற்கும் சாகசம் பெற்றால் அன்றோ? |