பக்கம் எண் :


2. வேட்டுவ வரி





5

கடுங்கதிர் திருகலின் நடுங்கஞர் எய்தி
ஆறுசெல் வருத்தத்துச் சீறடி சிவப்ப
நறும்பல் கூந்தல் குறும்பல வுயிர்த்தாங்கு
ஐயை கோட்டத் தெய்யா வொருசிறை
வருந்துநோய் தணிய இருந்தனர் உப்பால்


1
உரை
5

       கடுங்கதிர் திருகலின் - அங்ஙனம் அடைந்தவர், ஞாயிற்றின் வெவ்விய கதிர்கள் முறுகுதலால், நடுங்கு அஞர் எய்தி ஆறு செல் வருத்தத்துச் சீறடி சிவப்ப நறும்பல் கூந்தல் குறும் பல வுயிர்த்து ஆங்கு - மணமுள்ள பலவாக முடிக்கப்படும் கூந்தலையுடைய கண்ணகி வழிச்செல் வருத்தத்தினால் மிக்க துன்பத்தினை அடைந்து சிறிய அடிகள் சிவத்தலினால் வல்லா நடையோடும் குறுகப் பலவாக மூச்செறிதலின், ஐயை கோட்டத்து எய்யா ஒருசிறை வருந்து நோய் தணிய இருந்தனர் - அத்துன்பந் தணியும் வண்ணம் கொற்றவையின் கோயிலில் யாவரும் அறியாத ஒரு பக்கத்து இருந்தனர் ;

       நடுங்கு அஞர் - நடுங்குதற்கேதுவாகிய துன்பம் ; மிக்க துன்பம். வருந்துநோய் என்பதும் அது. உயிர்த்து - உயிர்த்தலின் என்க. ஆங்கு - அசை ; அப்பொழுதென்றுமாம். கூந்தல் திருகலின் வருத்தத்து அஞர் எய்திச் சிவப்ப உயிர்த்தலின் அடைந்தவர் நோய் தணியக் கோட்டத்து ஒரு சிறை இருந்தனர் என்க.


5. உப்பால் - மேலே ;