பக்கம் எண் :


2. மனையறம்படுத்த காதை


5
உரைசால் சிறப்பின் அரைசுவிழை திருவிற்
பரதர் மலிந்த பயங்கெழு மாநகர்
முழங்குகடல் ஞால முழுவதும் வரினும்
வழங்கத் தவாஅ வளத்த தாகி

அரும்பொருள் தரூஉம் விருந்திற் றேஎம்
ஒருங்குதொக் கன்ன உடைப்பெரும் பண்டம்
கலத்தினுங் காலினுந் தருவன ரீட்டக்


1
உரை
7

       (உரைசால் .... தருவனரீட்ட) கலத்தினும் காலினும் தருவனர் ஈட்ட - கலத்தானும் காலா னும் தந்து ஈட்டுதலால், அரும்பொருள் தரூஉம் விருந்தின் தேஎம் ஒருங்கு தொக்கன்ன உடைப் பெரும் பண்டம் - பெறுதற்கரிய பொருளைத் தரும் புதுமையுடைய தேயங்கள் ஒருங்கு கூடியிருந்தாற் போலும் பெருமையுடைய பண்டங்கள், முழங்கு கடல் ஞாலம் முழு வதும் வரினும் - ஆர்கலி சூழ்ந்த ஞாலமுழுதும் ஒருசேர வரினும், வழங்கத் தவாஅ வளத்தது ஆகி - வழங்கத் தொலையாத வளத்தினை யுடையதாகி, உரைசால் சிறப்பின் அரசு விழை திருவின் பரதர் மலிந்த பயம் கெழு மாநகர் - புகழமைந்த சிறப்பினையுடைய அர சரும் விரும்பும் செல்வத்தையுடைய பரதர் மிக்க பயன் பொருந்திய பெரிய புகார் நகரின்கண்,

       பரதர் - வணிகர் ; கடலோடிகள் என்பது அரும்பதவுரை பரதரால் மேன்மையுற்ற என்றுமாம். ஞாலம், ஆகுபெயர். தேஎம் - தேயம். புகாரின்கண் பிறநாட்டு அரும்பொருள்கள் வந்து தொகுதலை,

       1 "நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும்
       காலின் வந்த கருங்கறி மூடையும்
       வடமலைப் பிறந்த மணியும் பொன்னும்
       குடமலைப் பிறந்த வாரமு மகிலும்
       தென்கடன் முத்துங் குணகடற் றுகிரும்
       கங்கை வாரியுங் காவிரிப் பயனும்
       ஈழத் துணவுங் காழகத் தாக்கமும்
       அரியவும் பெரியவும் நெளிய வீண்டி"


       என்பதனானறிக. கலம் - மரக்கலம். கால் - வட்டை ; சாகாடு. தருவனர், எச்சமுற்று. ஈட்டுதலால் தொக்கன்ன பண்டம் வழங்கத் தவா வளத்ததாகி அரசு விழை திருவினையுடைய பரதர் மலிந்த நகர் என்க.

1 பட்டினப். 185-92.