பக்கம் எண் :


11. வஞ்சினமாலை






கோவேந்தன் தேவி கொடுவினை யாட்டியேன்
யாவுந் தெரியா இயல்பினே னாயினும்
முற்பகற் செய்தான் பிறன்கேடு தன்கேடு
பிற்பகற் காண்குறூஉம் பெற்றியகாண் நற்பகலே

1
உரை
4

கோ வேந்தன் தேவி - பேரரசனாய பாண்டியன் பெருந் தேவியே, கொடுவினையாட்டியேன் யாவும் தெரியா இயல்பி னேன் ஆயினும் - கணவனை இழந்த தீவினையுடையேனாகிய யான் ஒன்றுமறியாத தன்மையேன் ஆயினும், முற்பகல் செய்தான் பிறன்கேடு தன்கேடு பிற்பகல் காண்குறூ உம் பெற்றிய காண் - பிறனுக்கு முற்பகலில் கேடு செய்தானொருவன் தன் கேட்டினை அன்றைப் பிற்பகலே காணலுறுந் தன்மையையுடையன வினைகள் ;

கோ வேந்தன் - மன்னர் மன்னன் என்றுமாம் ; 1"மன்னவர் மன்னன் மதிக்குடை வாழ்வேந்தன் தென்னவன்" என்றார் முன்னும். கோவேந்தன் தேவி: விளி. பிறனுக்குக் கேடு செய்தானொருவனுக்குச் செய்த அன்றே கேடு எய்தும் என்பது தோன்ற, முற்பகல் கேடு செய்தான் பிற்பகல் கேடு காண்குறூஉம் என்றாள் ; முற்பகல் பிற்பகல் என்பன ஒரு பகலின் முற்கூறும் பிற்கூறுமாம். 2"பிறர்க்கின்னா முற்பகற் செய்யிற் றமக்கின்னா, பிற்பகற் றாமே வரும்" என்றார் வள்ளுவரும். பிறன்கேடு - பிறனுக்குக் கேடு ; நான்கனுருபு தொக்கது. தன்கேடு என்பதற்குத் தான் பிறனுக்குச் செந்த அக்கேடு என்று பொருள் கூறி, அதுவே தனக்கு வருதலைக் காண்பான் என்றுரைத்தலுமாம். பெற்றிய என்பதற்கு வினைகள் என எழுவாய் வருவிக்க, காண், அசை.

இனி, கண்ணகி தான் பிறந்த பதிப்பெருமை கூறுகின்றாள் :

1 சிலப். 16: 19--20. 2 குறள். 319.