பக்கம் எண் :

120பால காண்டம்  

5. திரு அவதாரப் படலம்
   

திருமாலின் அவதாரமான ராமபிரான் அவதாரம் செய்ததைக்  கூறும்
பகுதியாகும்.  இதில்  தயரத  மன்னன்  மகப்  பேறின்றி   இருத்தலை
வசிட்ட  முனிவரிடம்  கூறுதலும்.  வசிட்டர் தேவர்களுக்குத்  திருமால்
அருளியதைச்  சிந்தித்தலும்  புதல்வரை அளிக்கும்  வேள்வி  செய்யத்
தயரதனுக்கு  வசிட்டர் கூறுதலும். கலைக்கோட்டு  முனிவரால் வேள்வி
நடைபெறுதலும்    வேள்வித்தீயில்     எழுந்த     பூதம்   பிண்டம்
கொண்டுதருதலும்  அப்பிண்டத்தைத்   தயரதன்  தேவியர் மூவருக்கும்
பகிர்ந்தளித்தலும்  அதன் காரணமாகத் தேவியர்  கருவுறுதலும்  ராமன்
முதலிய  நால்வரும் அவதரித்தலும். புதல்வர்களுக்கு  வசிட்டர்  பெயர்
சூட்டுதலும்  பிள்ளைகளின்  வளர்ச்சியும்-கல்விப்  பயிற்சியும்-யாவரும்
போற்ற ராமன் இனிதிருத்தலும் விவரிக்கப்படுகின்றன.
 

180.ஆயவன். ஒரு பகல். அயனையே நிகர்
தூய மா முனிவனைத் தொழுது. ‘தொல் குலத்
தாயரும். தந்தையும். தவமும். அன்பினால்
மேய வான் கடவுளும். பிறவும். வேறும். நீ;
 
 

ஆயவன்-      (மேலே     அரசியல்     படலத்தில்    கூறிய
அப்பெருமையெல்லாம்  பொருந்தியவனான) அந்தத்  தயரத  மன்னன்;
ஒருபகல் அயனையே நிகர் தூயமாமுனிவனைத் தொழுது
-ஒரு நாள்
பிரமனுக்கு  ஒப்பாகத்  திகழும் தூய்மை  பொருந்திய மாமுனிவனாகிய
வசிட்ட   முனிவனை   வணங்கி; தொல்குலத்தாயரும்.  தந்தையும்.
தவமும்
-  பழமை  பொருந்திய எமது  குலத்தாய்மாரும்  தந்தைமாரும்
தவப்பயன்களும்; அன்பினால் மேயவான் கடவுளும்-அன்பு கொண்டு
நான்   விரும்பும்  கடவுளும்;  பிறவும்  வேறு  நீ-  மற்றையோரும்.
வேறுபட்ட உயிர்களும் அனைத்தும் எனக்குத் தாங்களேதாம்.

தவம்:     புண்ணியமும்ஆம்.  வான்:  உண்மை என்றும் பொருள்
கூறலாம்.  ‘பிறவும் வேறும்’ என்பது இங்குக்  கூறப்படாத மற்றஎல்லாம்
என்ற   பொருள்   தந்து   நின்றது.  வசிட்டரை   மன்னன்   எப்படி
மதித்துள்ளான்  என்பது  இதனால் புலப்படும். இது  குளகம்  நான்காம்
பாடலின் “என்றுளன்” எனவரும் சொல்லுடன் முடியும்.             1