பக்கம் எண் :

200பால காண்டம்  

6. கையடைப் படலம்
 

தரசதன்   தனது மைந்தர்களான இராமன். இலக்குவன் இருவரையும்
விசுவாமித்திர  முனி  வசம்  அடைக்கலமாக   ஒப்புவித்த செய்தியைக்
கூறும்  பகுதியிது  ‘  கையடை’   என்பதற்கு   அடைக்கலம்  என்பது
பொருள்.

தயரதனிடம்     விசுவாமித்திரன் வருதல் -  மன்னன் முனிவனை
வணங்கி   வரவேற்றல்.   மன்னனை  முனிவன்   புகழ்ந்து  பேசுதல்.
வேள்வியைக்  காக்க இராமனைத் தன்னுடன் அனுப்புமாறு  கேட்டல் -
தயரதன்  துயர்  -  தானே  வேள்வி  காக்க  வருகிறேன்   எனல்  -
முனிவன்  சினம்  கொள்ளலும்  அதன்  விளைவுகளும் -  வசிட்டன்
உரையால்  தயரதன்  தெளிவு  அடைதல் - இராம -  இலக்குவர்களை
முனிவனிடம்  ஒப்படைத்தல்  -  சினம்  நீங்கிய முனிவன்   அரசிளங்
குமரர்களைத்   தன்னுடன்   அழைத்தேகல்  ஆகிய   -   செய்திகள்
இப்பகுதியில் கூறப்படும்.
 

314.அரசர்தம் பெருமகன். அகிலம் யாவையும்
விரசுறு தனிக் குடை விளங்க. வென்றி சேர்
முரசு ஒலி கறங்கிட. முனிவர் ஏத்துற.
கரை செயல் அரியது ஓர் களிப்பின் வைகும் நாள்.

 
 

அரசர் தம் பெருமகன்-மன்னர் மன்னனாகிய  தயரதன்; அகிலம்
யாவையும்   விரசுறு   
-   உலகம்   முழுதும் தன் நிழலில்  வந்து
சேர்வதாகிய;  தனிக்குடை விளங்க - ஒப்பற்ற வெண்கொற்றக் குடை
விளங்கவும்; வெற்றி சேர் முரசு ஒலிகறங்கிட-வெற்றி மிகுந்த முரசின்
ஒலி  திரிந்து  ஒலிக்கவும்;  முனிவர்  ஏத்துற -முனிவர்கள் எல்லாம்
புகழவும்;   கரைசெயல்   அரியது  - அளவிடற்கு அரிதாகிய;  ஓர்
களிப்பில்   வைகும்   நாள்
- மகிழ்ச்சிக்  கடலில்  மூழ்கியவனாக
வாழ்ந்திருந்த காலத்திலே.

இந்தப்  பாட்டு சில பிரதிகளில் திரு அவதாரப் படலத்தின் இறுதிப்
பாடலாக  அமைந்துள்ளது.  கையடைப்  படலத்தின்  தோற்றுவாயாகக்
கூறப்படுவதாகும்.   அரசர்தம்  பெருமகன்:  சக்கரவர்த்தி.   ‘அகிலம்’
பரந்த  என்னும் பொருளில் உலகைக் குறித்து நின்றது.  சேர்தல். கரை.
வரம்பு  (அளவு)  கரை  என்னும் குறிப்பால் ‘களிப்பு’  கடல்  என்னும்
பொருளை  ஏற்றது. ‘நாள்’ காலத்தை உணர்த்தும்.  ‘எய்தினான்’  என்ற
அடுத்த  பாட்டோடு  முடியும்.  மகிழ்ச்சியுடன்  தயரதன்  வாழ்தலைக்
கூறியதாகும்.                                               1