பக்கம் எண் :

  தாடகை வதைப் படலம்217

நிலைத்   தொழிற் பெயர்.   வீ:  நன்குமலர்ந்த   மலர்.    அனங்கன்:
அங்கம்   இல்லாதவன்.  பூளைவீ:  பூளைப்பூ  காற்றில்    பறக்குமளவு
லேசானது. ‘மாருதமறைந்த பூளை’ என்பார் பின்னும்

சிவபிரானது   நெற்றிக்கண்    நெருப்பால்    மன்மதன்    எரிந்து
சாம்பலானான் என்பது கந்தபுராணத்துட் கூறப்படும் செய்தியாம்.      1
 

340.
 

‘வாரணத்து உரிவையான் மதனனைச்
   சினவு நாள்.
ஈரம் அற்றும் அங்கம் இங்கு
   உகுதலால். இவண் எலாம்.
ஆரணத்து உறையுளாய்! அங்க
   நாடு; இதுவும். அக்
காரணக் குறியுடைக்
   காமன் ஆச்சிரமமே.
 

ஆரணத்து   உறை யுளாய்   -   வேதங்களை  வாழும் இடமாக
உடையவனே;  வாரணத்து   உரிவையான்   -  யானைத்  தோலைப்
போர்த்தவனாகிய  சிவபிரான்; மதனனைச் சினவு நான் - மன்மதனைக்
கோபித்த  நாளில்;  ஈரம்  அற்று  அங்கம்  இங்கு  உகுதலால்  -
பசையற்றுப்    போய்    அவனது    சிதைந்த  உடல்  இங்குச்  சிதறி
வீழ்ந்ததால்;  இவணெலாம்  அங்கநாடு  - இந்த இடமெல்லாம் அங்க
நாடு  என  அழைக்கப்படும்  இடமாகும்;  இதுவும்  அக் காரணக்குறி
உடைகாமன்  ஆச்சிரமமே  
- இந்த இடமும். அந்தக்காரணக் குறியை
உடைய காமன் ஆச்சிரமம் என்று சொல்லப்படுவதாகும்.

வாரணம்:  யானை.  உரிவை:  உரித்த  தோல்.   யானை    உரித்த
தோலைச்  சிவபிரான்  போர்வையாக  உடையவன்  என்பது   புராணச்
செய்தி.   தனது   யாக   நிலையைக்    கெடுத்து.  காம    இச்சையை
யுண்டாக்குவதற்கு  மலர்க்கணைகளை  எய்த  மன்மதனைக்   கோபித்து
எரித்த   செய்தி  புராணத்துட்  கூறப்பட்டதாகும்;  ஈரம்:    உடற்பசை
உகுதல்:   சிதறுதல்   ஆரணம்:   வேதம்.   ஆரண+துறை    எனவும்.
ஆரணத்து  -உறையுள்  எனவும்  இருவிதமாகவும் விரித்துப்   பொருள்
கூறலாம்.                                                   2
 

341.
 

‘பற்று அவா வேரொடும் பசை அற.
   பிறவி போய்
முற்ற. வால் உணர்வு மேல்
   முடுகினார் அறிவு சென்று
உற்ற வானவன். இருந்து யோகு
   செய்தனன் எனின்.
சொற்றவாம் அளவதோ. மற்று
   இதன் தூய்மையே?’