பக்கம் எண் :

380அயோத்தியா காண்டம்

7. குகப் படலம்

     வனம் புகுந்த இராமன் குகனைத் தோழமை கொண்ட செய்தியை
உணர்த்தும் பகுதியாதலின் குகப்படலம் எனப் பெயர் பெற்றது.

      குகன் கையுறை ஏந்தி இராமனைக் காண வருதலும், இலக்குவன்
மூலம் இராமனது அழைப்புப் பெற்று அவனைக் காணுதலும், கையுறைப்
பொருளைத் தருதலும், தேனும் மீனுமாகிய அவற்றை அன்பினால் இராமன்
ஏற்றுக்கோடலும், மறுநாள் நாவாயுடன் வருக என்ற இராமன் வார்த்தையை
அவனது தனிமைத் துன்பம் நோக்கிக் கசிந்த மனத்தனாய் மறுத்துக் குகன்
அங்கேயே இருத்தலும், அன்றிரவெல்லாம் கண்விழித்து நின்ற குகன் காலைக்
கடன் முடித்த இராமன் ஆனையின் வண்ணம் நாவாய் கொண்டு வராது
இராமனைத் தன் சிருங்கிபேர நகரிலேயே தங்க வேண்டுதலும், இராமன்
மீண்டும் வரும்போது குகனிடத்திற்கு வருவதாகக் கூற, அதனை ஏற்று, குகன்
நாவாய கொணர, மூவரும் ஏறிக்கங்கைக் கரையைக் கடத்தலும்,
சித்திரகூடத்திற்கு வழி வினாவிய இராமனுக்குத் தன்னையும் உடன் கொண்டு
செல்லக் குகன் வேண்ட, இராமன் குகனை அவன் குடிகளுடன் இருக்கப்
பணிக்க, குகன் விடைபெற, மூவரும் வனத்துள் செல்லுதலும் ஆகிய
செய்திகள் இதனுள் கூறப் பெறுகின்றன.

குகனது அறிமுகம்  

கலிவிருத்தம்

1953.ஆய காலையின், ஆயிரம் அம்பிக்கு
நாயகன், போர்க் குகன் எனும் நாமத்தான்,
தூய கங்கைத் துறை விடும் தொன்மையான்,
காயும் வில்லினன், கல் திரள் தோளினான்.

     ஆய காலையின் - அந் நேரத்தில்; ஆயிரம் அம்பிக்கு நாயகன்-
ஆயிரம்நாவாய்களுக்குத் தலைவனும்;  தூய கங்கைத் துறை விடும்
தொன்மையான் -
தூய்மையானகங்கைத் கரையில் நெடுங்காலமாகப் படகு
விடும் தன்மை  உடையவனும்; காயும் வில்லினன் -பகைவரைச் சீறி
அழிக்கும் வில்லுடையவனும்;  கல் திரள் தோளினாள் - மலை போல்
திரண்ட தோளை உடையவனும் ஆகிய; போர் - போர்த் தொழிலில் வல்ல;
குகன் எனும்நாமத்தான் - குகன் என்ற பெயரை உடையவன்.