பக்கம் எண் :

582அயோத்தியா காண்டம்

உயர்ந்த தோள் வீரன் வைகிய- வில்லைத் தழுவியிருக்கும் உயர்ந்த
தோள்களை உடைய இராமன் தங்கியிருந்த;  புல்லணைமருங்கில் -
புல்லாலாகிய படுக்கையின் பக்கத்தில்;  தான் -; பொடியின் -
மண்புழுதியின்கண்;  வைகினான் - தங்கியிருந்தான்.

     இராமனைப் போலவே தன்னையும் அத்தகைய துன்பங்களுக்கு
ஆட்படுத்திக்கொள்ளும் மனநிலையில்பரதன் உண்ணாமல் உறங்காமல்
புல்லணைப் பக்கலில் மண்ணில் தங்கினான் ஆம். இராமன் புல்அணையில்
தங்களை ‘எம்பிரான் புல் அணை வைக’ என்ற (4276) இலக்குவன்
கூற்றாலும் உணர்க. இரவில் கண்ணீர் அருவி ஆடினன் என்பதால்
உறங்காமலும் இருந்தான்என்பதாம்.                               58

பரதன் நடந்து செல்லுதல்  

2302.‘ஆண்டு நின்று, ஆண்தகை அடியின் ஏகினான்
ஈண்டிய நெறி’ என, தானும் ஏகினான் -
தூண்டிடு தேர்களும் துரக ராசியும்
காண்தகு கரிகளும் தொடர, காலினே,.

     ‘ஆண்டு நின்று - அங்கிருந்து;  ஆண்தகை - ஆடவர் திலகனாய
இராமன்;  ஈண்டிய நெறி - நெருங்கிய வழியிலே;  அடியின் ஏகினான் -
காலால் நடந்துசென்றான்;  என - என்று (அறிந்து); தானும் - பரதனும்;
தூண்டிடு தேர்களும்- செலுத்தப்படும் தேர்களும்; துரகராசியும் -
குதிரைத் தொகுதிகளும்; காண்தகுகரிகளும் - காட்சிக்குப் பொருந்திய
யானைகளும்; தொடர - (தன்னைப்)பின்பற்றிவர; காலின் ஏகினான் -
காலால் நடந்து சென்றான்.

     இராமன் நடந்து சென்ற பாதையில் தானும் நடந்தே செல்லவேண்டும்
என நினைத்தது அவன்அன்பு மிகுதியைப் புலப்படுத்தும். “காண்தகு
கரிகள்” என்பதனை, “யானையுடைய படை காண்டல் மிகஇனிதே”
என்பதனுடன் (இனியவை. 4) ஒப்பிடுக. “படை தனக்கு யானை வனப்பாகும்”
என்பதும்(சிறுபஞ்ச. 5) இக்கருத்தை வலியுறுத்தும். ‘ஏ’ காரம்ஈற்றசை.   59