பக்கம் எண் :

கங்கை காண் படலம் 583

12. கங்கை காண் படலம்

     பரதன் கங்கையைக் காண்கின்ற படலம் எனப் பொருள்படும். இராமன்
கங்கையைச் சென்றடைந்த பகுதி முன்னர் (6)க் கங்கைப் படலம் எனப்
பெற்றது போலவே பரதன் கங்கையைக் காணும் பகுதியும் கங்கை காண்
படலம் என்றாயிற்று. இராமன் காடு செல்கிறபோது வழியில் கங்கைக் கரை
அடைகிறான் ஆதலின், கங்கைப் படலம் எனப்பெற்றது; ஆனால், பரதனோ
இராமனைக் காண வேண்டும் என்னும் காட்சி நோக்கத்தின் முனைப்பில்
கங்கையை அடைதலின் கங்கைப் படலம் என்னாது கங்கை காண் படலம்
என்றாயிற்று.

     பரதன் நடந்து சென்று கங்கைக் கரை அடைகிறான். சேனைகளோடு
வரும் பரதனைக் கண்டு குகன் ஐயமுற்றுக் கங்கையின் தென்கரை நின்று
தன் சேனைகளுக்குத் தயார் நிலையில் இருக்க அறைகூலிக் கட்டளை
இட்டுப் பரதனைக் காண வடகரைக்குத் தனி நாவாயில் வருகிறான்.
சுமந்திரனால் இராம சகோதரன் குகன் என்பதை அறிந்த பரதனும்
ஆர்வத்தோடு அவனை எதிர்நோக்குகிறான். பரதன் நிலை கண்டு திடுக்குற்ற
குகன் ஐயம் நீங்கி ஐயப்பட்டதற்கு அவலப்படுகிறான். பரதனைப் பாராட்டி
இராமன் உறைந்த, உறங்கிய இடங்களைக் காட்டி, இலக்குவன் செய்த
செயலையும் ‘எடுத்துச் சொல்ல, அது கேட்ட பரதன் பெரிதும் வருந்துகிறான்.
குகன் ஆணையால் நாவாய்கள் வரப் பரதனும், இளவலும், தாயரும்,
உடன்வந்தோரும், சேனைகளும் கங்கையின் தென்கரை அடைகிறார்கள்.
இடையே நாவாயில் தாய்மார்களைப் பரதன் குகனுக்கு அறிமுகப்படுத்தக்
குகன் வணங்குகிறான். தென்கரை சேர்ந்து தாயர்பல்லக்கில் வர, நடந்து
வரும் பரதனைப் பரத்துவாச முனிவர் வரவேற்கிறார் என்பதுவரை உள்ள
செய்திகள் இப்படலத்திற் கூறப்பெறுகின்றன.

பரதன் கங்கைக் கரை அடைதல்  

கலிவிருத்தம்

2303.பூ விரி பொலன் கழல், பொரு இல் தானையான்,
காவிரி நாடு அன்ன கழனி நாடு ஒரீஇ,
தாவர சங்கமம் என்னும் தன்மைய
யாவையும் இரங்கிட, கங்கை எய்தினான்.

     பூவிரி - பூத் தொழிலாற் சிறப்புற்ற;  பொலன்கழல் - பொன்னாற்
செய்யப்பெற்ற வீரக்கழலை அணிந்த;  பொருஇல் தானையான் - ஒப்பற்ற
சேனையை உடையபரதன்;  காவிரி நாடு அன்ன - காவிரி நதியால்
வளம்பெறும் (தமிழகத்துச்) சோழ நாட்டை ஒத்த;