பக்கம் எண் :

கடவுள் வாழ்த்து 1

ஆரணிய காண்டம்

கடவுள் வாழ்த்து

2516.பேதியாது நிமிர் பேத
     உருவம் பிறழ்கிலா,
ஓதி ஓதி உணரும் தொறும்
     உணர்ச்சி உதவும்
வேதம், வேதியர், விரிஞ்சன்,
     முதலோர் தெரிகிலா,
ஆதி தேவர்; அவர் எம்
     அறிவினுக்கு அறிவுஅரோ

    பேதியாது - தன் உயர்நிலையில்தான் வேறுபடாமல்; நிமிர் பேத
உருவம் -
தன்னிடம் தோன்றி வளரும் பலவகை வடிவங்களிலிருந்தும்;
பிறழ்கிலா - தான்வேறுபடாதும்; ஓதி ஓதி உணரும் தொறும் - பலமுறை
கற்று ஆராயும் பொழுதும், உணர்ச்சிஉதவும் - மெய்யுணர்வை அருளும்,
வேதம் - நான்கு வேதங்களும், வேதியர் - அவற்றை ஓதும்
அந்தணர்களும், விரிஞ்சன் முதலோர் - பிரமன் முதலிய தேவர்களும்,
தெரிகிலா - ஆராய்ந்தறிய முடியாத, ஆதி தேவர் - முதல் கடவுள்; அவர்
எம்அறிவினுக்கு அறிவுஅரோ -
அவரே எம் சிற்றறிவுக்கு அறியும்
பொருள்.

     ஆதிதேவனை வணங்குவோம் என்பது குறிப்பு.பேத உருவம் என்பது
தேவர், விலங்கு, ஊர்வன முதலிய சராசர வடிவங்கள். உருவம் பிறழ்கிலாமை
என்பது உடல் மாறினும் அவ்வுடலுள் உயிர் போல் உயிருள் உயிராய்
இருப்பது. உயிர்தனைப்படைப்பவனும் வேதியருட் சிறந்தவனுமான பிரமனை
முதலாகக் கூறினார். மூலப் பரம்பொருள்நுட்பமாகவும் அதிநுட்பமாகவும்
ஆதிதேவர் எனச்சுட்டப்பட்டது. அறிவு - ஆகுபெயர், அரோ - அசை.
அறிவரோ எனக் கொண்டு அறியும் பொருள் ஆவரோ; ஆகார் எனவும்
பொருள் கொள்வர். நெடிலடிநான்கு கொண்ட கலித்துறை. சிலர் அளவடி
நான்கு கொண்ட கலிவிருத்தம் எனவும் கொள்வர்.