6. கரன் வதைப் படலம் கரனது வதையைப் பற்றிக் கூறும் பகுதியெனப் பொருள்படும். படலச் சுருக்கம்: சூர்ப்பணகை கரன்முன் விழுந்து முறையிடுகின்றாள். அது கண்ட கரன் கொதித்தெழுகின்றான்; அப்பொழுது அக்கரனை விலக்கிப் பதினான்கு வீரர்கள் போரிடச் செல்லுகின்றனர்; அப் போரில் அரக்க வீரர் மடியச் சூர்ப்பணகை கரனிடம் மறுபடியும் ஓடுகின்றாள்; அதைக் கண்ட கரன் வெகுண்டெழுகின்றான்; பின், போர்ப் பறை கேட்டு நாற்படையும் எழுகின்றன; கரன் படையினர் போர்க் கருவிகளை ஏந்தி நிற்கின்றனர்; தானைத் தலைவரும் சேனை வீரரும் எழுகின்றனர். கரனும் பெருந் தானையோடு இராமன் உறைவிடம் சேர்கின்றான். இராமன், இலக்குவனைத் தடுத்துப் போருக்குப் புறப்படுகின்றான். ஆனால், இலக்குவனோ 'இப் போரினை எனக்கு அருளுக'வென மீண்டும் வேண்டுகிறான். இலக்குவனுக்கு இசையாத இராமன் தானே போர் மேல் செல்லுகிறான். அப்பொழுது சூர்ப்பணகை கரனுக்கு இராமனைக் காட்டுகிறாள். கரனும் இராமனுடன் தானே பொருவேன் என்கிறான். அந்நிலையில் தீய குறிகளைக் கண்ட அகம்பன் அறிவுரை கூறுகிறான். ஆனால், அந்த அறிவுரையைக் கரன் புறக்கணிக்கப் படைகளும் போர்மேற் செல்லுகின்றன. அப் படைகள் யாவும் இராமன் விடுத்த பாணத்தால் அழிகின்றன. படைத் தலைவர் பதினால் வரும் மாய்கின்றனர்; பின் திரிசிரா போர் செய்ய வருகின்றான்; சேனைகளையும் திரிசிராவையும் இராமன் எதிர்த்துப் பொருகிறான்; போரில் திரிசிரா இரண்டு தலைகளை இழந்து ஒரு சிரசோடு போர் செய்கிறான். பின் அத் திரிசிரா மடிய, அரக்கர் சேனை சிதறி ஓடுகின்றது. அவ்வாறு புறங் கொடுப்பாரைத் தேற்றித் தூடணன் வீரவுரை கூறுகின்றான். அத் தூடணன் எதிர்த்து வர, இராமன் அவனோடு பொருகின்றான். அப்போரில் தூடணன் மாயக் கரன் வெகுண்டு பெரும்படையுடன் போருக்கு எழுகின்றான்; அவன் இராமன் முன் எதிர்ப்படுகின்றான். இராமன் பிடித்த வில் ஒடிந்ததைக் கண்ட வானவர் ஏங்கியஞ்சுகின்றனர். இராமன் வருணன் கொடுத்த வில்லைப் பெறுகின்றான். கரனும் இராமனும் எதிரெதிரே நின்று போர் செய்கின்றார்கள். முடிவில், கரன் மடிய, வானவர் மகிழ்கின்றார்கள்; பின்னர் இராமன் சீதையை அணுகுகின்றான். சூர்ப்பணகையோ அழுது புலம்பி இலங்கைக்கு ஏகுகின்றாள். சூர்ப்பணகை கரன்முன் விழுந்து முறையிடுதல் கலிவிருத்தம் 2875. | இருந்த மாக் கரன் தாள் இணையின் மிசை, சொரிந்த சோரியள், கூந்தலள், தூம்பு எனத் |
|