பக்கம் எண் :

4ஆரணிய காண்டம்

வந்த அளவே -எல்லாத் தேவர்களோடும் எல்லா உலகங்களும் வந்த
தன்மையதே!; எமரின் - எங்களைவிட;யார் தவம் முயன்றவர்கள் -
யாரே தவ முயற்சியில் ஈடுபட்டவர்கள்?; என்று உருகினன்- என்று கூறி
மனம் உருகினான்.

     சுற்றம் சூழ இருப்பது உலகினர்க்குப் பெருமகிழ்வூட்டும். எனவே
தமரெலாம் வர உவந்தனையஎன்றார். எமரின்யார் தவம் முயன்றவர்கள்
என்பதற்கு இவ்வரும்பேறு பெற்ற எம்போல் நல்வினைசெய்தார் யார்
என்றுமாம். அமரர் - சாவில்லாதவர். தாம்தேடி அடைய வேண்டியவன்
தன்னை நாடிவந்ததால் உவப்பு மிகுந்தது.                           3

தண்டக வனம் புகுதல்  

2520.அன்ன மா முனியொடு அன்று,
     அவண் உறைந்து, அவன் அரும்
பன்னி, கற்பின் அனசூயை
     பணியால், அணிகலன்,
துன்னு தூசினொடு சந்து, இவை
     சுமந்த சனகன்
பொன்னொடு ஏகி, உயர் தண்டக
     வனம் புகுதலும்,

     அன்ன மா முனியொடு - அந்தமாட்சிமை பெற்ற முனிவருடன்;
அன்று - அன்றைய பொழுது; அவண் உறைந்து -(இராமலக்குவ சீதை
ஆகியோர்) அவ்வுறையுளில் தங்கியிருந்து; அவன் அரும் பன்னி -
அம்முனிவனின் அரிய சிறப்புடைய மனைவியாம்; கற்பின் அனசூயை -
கற்பிற் சிறந்தஅனசூயை என்பவளின்; பணியால் - கட்டளைப்படி;
அணிகலன் - அழகிய நகைகளும்; துன்னுதூசினொடு - பொருந்திய
ஆடைகளும்; சந்து - சந்தனமும்; இவை - ஆகியஇவற்றை; சுமந்த -
தாங்கி ஏற்ற; சனகன் பொன்னொடு - சனகன் மகளாம்சீதையுடன்; ஏகி -
அவ்விடம் விட்டுச் சென்று; உயர் தண்டக வனம் புகுதலும் -சிறந்த
தண்டகாரணியத்தில் புகுந்தவுடன்.

     பன்னி - பத்தினி அனசூயை - அழுக்காறில்லாதவள், அணிகலன்கள்
சீதை அழகை மிகுவிக்காதுஅதனை மறைத்தலின் சுமந்த என்றார். பொன் -
திருமகள்; ஆகுபெயர். தண்டகவனம் தண்டகன்என்னும் மன்னனால் பெயர்
பெற்றது அவன் சூரிய குலத்தில் இட்சுவாகு மன்னனின் நூறு மக்களில்
கடைப்பட்ட மூடன் எனக் கொண்டு தண்டன் எனப் பெயரிடப் பெற்றவன்.
விந்தமலைக்கும் சைவலமலைக்கும் இடைப்பட்ட நிலத்தை மது மந்தம்
எனும் தலைநகரைக் கொண்டு ஆண்டான். ஒருநாள்சுக்ராச்சாரி
ஆசிரமத்துள் அவர்மகளாம் அரசையைக் கற்பழித்தான். எனவே
ஆச்சாரியரின்சாபத்தால் அவன் குடும்பம், சேனை, நாடு ஆகியவை மண்
மாரியால் அழிந்தன. பின்பு அந்த இடம்காடாகித் தண்டகாரணியம் எனப்
பெயர் பெற்றது. அணி பறித்து அழகு செய்தார்(6991).                 4