பக்கம் எண் :

இராவணன் சூழ்ச்சிப் படலம் 573

10. சடாயு உயிர் நீத்த படலம்

     அறத்தின் நாயகியை மாரீச மானால் வஞ்சித்து இராவணன்
எடுத்துச் சென்றபொழுது கழுகரசனாகிய சடாயு அவனைத் தடுத்துப்
போரிட்டு வலி சிதைத்து. இறுதியில் அவனது சந்திரகாசமெனும்
தெய்வ வாளால் சிறகு அறுபட்டு விழுந்தான். அவன் அப்போது
இறந்து படவில்லை; இராமலக்குவருக்குச் செய்தி அறிவிக்க அரிதின்
உயிர் தாங்கி இருந்தான். இச் செய்தியை அவன் இராமலக்குவருக்குக்
கூறிய பின்னர்த் தன் உயிரை விட்டான். தந்தையின் நண்பனுக்குத்
தசரத ராமன் மாளாத சோகப் புலம்பலுடன் நீர்க் கடன் செய்தான்
என்ற செய்திகள் இப்படலத்தில் கூறப்படுவதால், இது சடாயு உயிர்
நீத்த படலம் என்று பெயர் பெற்றது.

     சடாயு இராம கைங்கர்யத்தில் ஈடுபட்டுத் "தன் உயிர் புகழ்க்கு
விற்றவன்" ஆகையால் பக்தியின் அடிப்படையில் இப்படலம் "சடாயு
மோட்சப் படலம்" என்று பெயர் பெறும் என்ற கருத்தும் உண்டு.
இதைச் "சடாயு வதைப்படலம்" என்று குறிப்பிடுவதும் உண்டு,
கவிப்பெருமகன் கம்பனது திருவுள்ளத்தின்படி பாவச் சார்பாளரின்
அழிவே "வதை" என்ற சொல்லால் குறிக்கத்தக்கதாகும். அறத்தின்
நாயகன் அறந்தலை நிறுத்த நடத்தும் அலகிலா விளையாட்டில் பட்டு
அழிபவரே "வதை" என்ற சொல்லுக்கு உரியவர் ஆவர். அனுமன்
வலியால் அழியும் பாவச் சின்னங்களின் அழிவும் வதை எனவே
படும். சுருங்கச் சொன்னால் அறந்தலை நிறுத்த அறச் சார்பாளர்
தீமையை அழிப்பதையே கவிஞர் பெருமான் "வதை" எனற சொல்
சார்த்தித் தலைப்பிட்டு விளக்கியுள்ளார். வாலி வதைப்படலம், அக்க
குமாரன் வதைப் படலம், கும்பகருணன் வதைப் படலம், அதிகாயன்
வதைப் படலம், இந்திர சித்து வதைப்படலம், இராவணன் வதைப்
படலம் போன்று வரும் பல படலப் பெயர்கள் மேல் கூறிய கருத்திற்கு
அரண் சேர்த்தலை எண்ணுக. எனவே, அறத்துணைவனாகவும்,
கைங்கர்ய பாவனாகவும் உள்ள சடாயுவின் இறப்பைக் குறித்து வரும்
படலம் "வதை" என்ற அறச்சார்பற்றவர்களுக்கு வந்துள்ளது போல்
கவிஞரால் பெயரிடப்பட்டிருக்க முடியாது எனத் திண்ணமாய்க்
கூறலாம். எனவே, இப்படலத்தின் பெயர் சடாயு உயிர் நீத்த படலம்
என இருத்தலே இராமகாதையின் அறநாட்டப் போக்குக்கு ஒத்து
அமையும் என்க.

     இராவணன் சீதையைத் தூக்கிச் செல்லும்போது அவள்
இரக்கமில் அரக்கர்க்கு குற்றம் எது, பழிதான் எது என்று
கலங்கினாள். அவ்வபயச் சொல் கேட்ட சடாயு "எங்கடா போவது
எங்கே" என எதிர் வந்து இராவணனைத் தடுத்தான். இருவருக்கும்
போர் மூண்டது சடாயு இராவணனது கொடி, குண்டலம், திருமுடி,
கவசம், வில் முதலியவற்றையும் தேரையும், தேர்ப்பாகனையும்
சிதைத்து அழித்தான். சினம் கொண்ட இராவணன் மாற்றருந் தெய்வ
வாளால் சடாயுவின் சிறகுகளை வெட்டி வீழ்த்தினான். சீதை அது
கண்டு புலம்பித் துன்புற்றாள். அரக்கன் சீதையை இலங்கைக்குக்
கொண்டு சென்று தொடற்கரும் அரக்கியர் காவல் நடுவே வைத்தான்.