பக்கம் எண் :

கடவுள் வாழ்த்து3

கிட்கிந்தா காண்டம்

 கடவுள் வாழ்த்து

 

கலிவிருத்தம்

3708. மூன்று உரு எனக் குணம்
     மும்மை ஆம் முதல்,
தோன்று உரு எவையும்,
     அம் முதலைச் சொல்லுதற்கு
ஏன்று உரு அமைந்தவும்,
     இடையில் நின்றவும்,
சான்றவர் உணர்வினுக்கு
     உணர்வும், ஆயினான்.

     மூன்று உரு என - மூன்று உருவங்கள் உடைமைபோல;
மும்மைக்குணம்ஆம் -மூன்று குணங்களை உடைய; முதல் -முழுமுதற்
கடவுள்; தோன்று உரு எவையும் - தோன்றிய தத்துவங்கள் அனைத்துமாய்;
அம்முதலைச் சொல்லுதற்கு - அந்த முதற்கடவுளை (பெயரும் உருவமும்
கொடுத்து)ச் சொல்லும்படி; ஏன்று உரு அமைந்தவும் - பொருந்தி,
வடிவமைந்த உலகங்களாய்; இடையில் நின்றவும் - அவ்வுலகிடைப்
புகுந்துநின்ற உயிர்களாய் (ஆனவன்); சான்றவர் - சான்றோர் (ஞானிகளின்);
உணர்வினுக்கு - : உணர்வும் ஆயினான் - உணரப்படும் பொருளும்
ஆனவன்.

     அனைத்துமாய் விளங்கும் இறை இயல்பு ஈண்டு உணர்த்தப்பட்டது.
மூன்று உரு என்பது பிரமன், திருமால், சிவபிரான் என்னும் தெய்வங்களைக்
குறிக்கும்.  மும்மைக்குணம் - மூன்று குணங்கள் - சாத்துவிகம், இராசதம்,
தாமதம் என்பன. மூன்று உரு அமைந்து மும்மைக் குணங்களுடன் விளங்கும்
இறைநிலையை ''மூன்று கவடாய் முளைத்தெழுந்த மூலமோ?'' (3682) என்ற
கவந்தன் கூற்றாலும் ''மூவகை உலகுமாய், குணங்கள் மூன்றுமாய்'' (6251)
''மூன்று அவன் குணங்கள், செய்கை மூன்று, அவன் உருவம் மூன்று'' (6310)
என்ற பிரகலாதன் உரைகளாலும் கம்பர் முன்னரும் பின்னரும் கூறுதல்
காண்க.