பக்கம் எண் :

கடவுள் வாழ்த்து3

கொன்று, காசில்கொற்றத்தைக் காட்டிய கிட்கிந்தா காண்டத்தைவிட,
பெருமான் மணிமுடி சூடியதைக் கூறும் யுத்த காண்டத்தைவிட சுந்தரகாண்டம்
எவ்வகையில் உயர்ந்தது என்னும் ஐயம் தோன்றுவது இயற்கையே. இவ்
ஐயத்தைப் போக்க பலர் முயன்று பலவாறு கூறுகின்றனர்.

    சிறையிலிருக்கும்பிராட்டியின்பால் இராமதூதன் பெருமானின் திருமேனி
அழகைப் பலபடியாக விவரிக்கின்றான்; அதனாலும், பெருமானைப் பிரிந்த
பிராட்டி மென் மருங்குல் போல் வேறுள அங்கமும் மெலிந்து புடமிட்ட
பொன்போல விளங்குவதைக் கூறுவதாலும், சுந்தரனாகிய அனுமன் புகழ்
ஒன்றே விவரிக்கப்படுவதாலும் இக்காண்டம் சுந்தர காண்டம் எனும் பெயர்
பெற்றது என்று பலர் கூறுகின்றனர். இக் காரணங்கள் அனைத்தும் அன்பின்
அடிப்படையிலும் உண்மையின் அடிப்படையிலும் எழுந்தனவே. ஆயினும்,
இவற்றினும் மேலான உண்மை ஒன்று உள்ளது. இராவணன் வரபலத்தாலும்,
படை பலத்தாலும், தேசத்தார்க்கு இடுக்கண் தந்தான். தேவியைச் சிறையில்
வைத்தான். மன்னுயிர் புடைத்துத் தின்றான். இதனால் அறத்தின்பால் ஈடுபாடு
கொண்ட சமுதாயம், இராவணன் வீழ்ச்சியை எதிர்பார்த்துக் கொண்டிருந்தது.
இராவணன் வீழ்ச்சியடைய மாட்டானா ? அவன் படை அழியாதா ? அவன்
நகர் தொலையாதா ? அவன் செல்வங்கள் சிதையாவா ? செருக்குக் கொண்ட
அரக்கர்கள் ஒழியார்களா ? என்று மானுட சமுதாயம் எதிர்பார்த்துக்
கொண்டிருந்தது. அந்த எதிர்பார்ப்பு முழுமையையும் நிறைவேற்றி
வைக்கின்றான் இராம தூதனாகிய அனுமன். அனுமன் சோலையை
அழிக்கின்றான். சேனையைத் துவைக்கின்றான். இராவணன் இதயத்தில்
அச்சத்தை விதைக்கின்றான். பாவபண்டாரமான இலங்கையை எரிக்கின்றான்.
தருமத்தின் வெற்றியை எதிர்பார்த்து, எதிர்பார்த்து, ஏமாந்து காய்ந்து கிடந்த
புண்ணிய இதயங்கள், இராவணன் வீழ்ச்சிக்குக் கால்கோள் விழாவை வழங்கிய
இக் காண்டத்தைச் சுந்தரம் என்று பெயரிட்டு மலரிட்டுப் பூசித்துப் பேரின்பம்
பெற்றன. அறச் சிந்தனையாளர்களின் எண்ணங்களே வால்மீகியின் இதயத்தில்
சுந்தர காண்டமாக மலர்ந்தது.

     இக்காண்டத்தின் நாயகன் அனுமனே. இராவணன் முதலான
அரக்கர்களும் இந்திரசித்தன் முதலான வீரர்களும் வீடணன் போன்ற
சான்றோர்களும் உப பாத்திரங்களே. பிராட்டியும்கூட அனுமனின் பேருருவுக்கு
முன்னே அனுமனின் தியாகத்துக்கு முன்னே, அனுமனின் தொண்டுக்கு
முன்னே உப பாத்திரமாக ஒளி வீசுகிறாள். இக் காண்டத்திற்கு ஒரே எழுவாய்
உண்டு. அவன் அனுமனே. மற்றவையெல்லாம் செயப்படுபொருளே.