பக்கம் எண் :

உருக் காட்டு படலம்333

4.உருக்காட்டுப்படலம்

    அனுமன் தன்னுடையமந்திர சக்தியினால் அரக்கியர்களுக்கு
உறக்கத்தை வருவிக்கின்றான். அப்போது பிராட்டி பலவாறு புலம்புகிறாள்.
என்னைச் சிறையிலிருந்து பெருமான் விடுவிக்கின்ற காலத்தில் யான் என்
கற்பை எப்படி மெய்ப்பிப்பேன் என்று மனம் நொந்து தற்கொலை
செய்துகொள்ள மாதவிச் சோலைக்குச் செல்கிறாள்.

    அங்கு அனுமன்வெளிப்பட்டு, யான் இராமதூதன்; நீ ஐயம்
அடையாதே; கூறிய மொழிகளும், கொடுத்த அடையாளமும் உண்டு என்றான்.
அது கேட்ட பிராட்டி அவன்பால் நம்பிக்கைகொண்டு வீர! நீ யாவன்?
என்றாள். அனுமன் தன் வரலாற்றையும், இராமபிரானின் திருமேனிப்
பொலிவையும் விவரிக்கிறான். இவற்றைக் கேட்ட பிராட்டி தழலிலிட்ட
மெழுகுபோல் மனம் உருகினாள். அப்போது அனுமன், இராமபிரான்
சொல்லியனுப்பிய அடையாள மொழிகளைப் பகர்ந்தான். அடையாளம் கூறிய
அனுமன், பெருமான் கொடுத்த திருவாழியைப் பிராட்டியிடம் காண்பி்த்தான்.
அதைக் கண்ட பிராட்டி  பேருணர்வு பெற்றாள்.  திருவாழியை  வாங்கி
மார்பில்  வைத்துக் கொண்டாள்;  சிரத்தில் தாங்கினாள். கண்களில் ஒற்றிக்
கொண்டாள். உணர்ச்சி வயப்பட்ட பிராட்டி அனுமனுக்குச் சிரஞ்சீவிப்
பதத்தைத் தருகிறாள். அப்போது அனுமன் பிராட்டியைப் பிரிந்த பிறகு
இராமன் உற்ற துன்பத்தையும் அவன் சுக்கிரீவனுடன் நட்புக் கொண்டதையும்,
இராவணனை வென்ற வாலியைக் கொன்றதையும் பிறவற்றையும் விரிவாகச்
சொன்னான். அது கேட்ட பிராட்டி இச்சிறு உருவத்தோடு எங்ஙனம் கடல்
கடந்தாய் என்று வினவ, அனுமன் தன் பேருருவைக் காட்டுகிறான். அது
கண்டு தேவி வியந்தாள். பேருருவை அடக்குக! என்றாள். அனுமன் சிற்றுருக்
கொண்டு பணிந்து நின்றான்.

    இப்படலம்சம்சார மண்டலத்தில் உழல்கின்ற புனித ஆன்மாவுக்கு
இறைவனால் அனுப்பப் பெற்ற குரவர்பிரான் நம்பிக்கை ஊட்டுவதையும்,
ஆன்மா தெளிவு பெறுவதையும் குறிப்பால் உணர்த்துகிறது என்பர்.

    திருவாழியைஅனுமன் பிராட்டியின்பால் தருதல் குரவர்பிரான் புனித
ஆன்மாவுக்குத் தீட்சை வழங்குதலைக் குறிக்கும்.