பக்கம் எண் :

கடல் தாவு படலம்7

வட்டமான மதிலையும்;கொற்ற வாயிலும் - வெற்றியை அறிவிக்கும் கோபுர
வாயிலையும் ; மணியின் செய்த வெண்தள - மணிகள் பதிக்கப் பெற்ற
வெண்மையான; களப மாட  வீதியும் - சுண்ணம் பூசப்பெற்ற, மாளிகைகளை
உடைய வீதியையும்; பிறவும் எல்லாம் - (கூறப்பெறாது விடுத்த)
பிறவற்றையும்; கண்டணன் - பார்த்தான்; அண்டமும் - வானத்தின் உச்சியும்;
திசைகள் எட்டும் - எட்டுத் திக்குகளும்; அதிர - எதிரொலிக்க; தோள்
கொட்டி ஆர்த்தான்
- தோள்களைப் புடைத்து ஆரவாரித்தான்.

     அனுமன் இலங்கைமூதூரின் காவற்சோலை முதலியவற்றைப் பார்த்து
மகிழ்ச்சியால் தோள்களைப் புடைத்து ஆரவாரித்தான்.

    இலங்கை மூதூர் -மூது இலங்கை ஊர். நாஞ்சில் - மதில் மேல் குருவித்
தலைபோல் அமைக்கப் பெற்ற உறுப்பு. சிலப்பதிகாரத்தில் அடைக்கலக்
காதையில் காண்க (217) அண்டம் - பிரபஞ்ச உருண்டை என்றும் கூறலாம்.
திசைகள் கூறப் பெற்றமையால் (அண்டம் என்பதற்கு) வான்முகடு கூறப்
பெற்றது. ‘அண்டமுற நிமிர்ந்தாடும் அப்பன்’ என்பர் அம்மையார் (மூத்த
திருப்பதிகம்). அதிர - எதிரொலிக்க. வீரர்கள் உற்சாகத்தால் தோள்
கொட்டுவர். ‘தன் தோள் கொட்டித் தடவரையை... எடுத்தான்’ (நாவரசர் -
ஆராத இன்னமுதை 10) கண்டனென்... பிறவும் என்னா... ஆர்த்தான் என்னும்
பாடம் கொண்டு மதில் முதலானவற்றைப் பார்த்தேன் என்று கூறி
ஆரவாரித்தான் என்று பொருள் கூறுவாரும் உளர். தளம் - சுண்ணச் சாந்து.
தாழியும் சாந்தும் தளம் ஆகும். (பிங் 3615) கடிபொழில் என்பது
காவற்காட்டை. இது காட்டரண். கொற்றவாயில் - கோபுரவாசல். நம் கோன்
கொற்றவாயில் (சிலம்பு 20-16) களப மாட வீதி - யானை செல்லும் வீதி
என்றும் கூறலாம்.                                       (2)

மகேந்திரமலையில்  நிகழ்ந்த குழப்பம்

4743.

வன்தந்தவரிகொள் நாகம்,
     வயங்குஅழல் உமிழும் வாய,
பொன்தந்தமுழைகள்தோறும்
     புறத்து உராய்ப் புரண்டு போவ -
நின்று, அந்தம்இல்லான் ஊன்ற -
    நெரிந்துகீழ் அழுந்தும் நீலக்
குன்றம் தன்வயிறு கீறிப்
     பிதுங்கினகுடர்கள் மான.
 

5