பக்கம் எண் :

788சுந்தர காண்டம்

இலங்கை நகரைஎரியுண்ணுதல் 

5942.

நீல் நிறநிருதர், யாண்டும் நெய் பொழி வேள்வி
                                    நீக்க,
பால் வரு பசியன், அன்பான் மாருதி வாலைப் பற்றி,
ஆலம் உண்டவன்நன்று ஊட்ட, உலகு எலாம்
                         அழிவின் உண்ணும்
காலமே என்னமன்னோ, கனலியும் கடிதின்
                         உண்டான்.

     நீல் நிறநிருதர் யாண்டும் நெய் பொழி வேள்வி நீக்க -
கருநிறத்தவர்களான அரக்கர்கள் எங்கும், நெய் சொரிந்து செய்யும்
யாகங்களைப் புரிய வொட்டாமல் நீக்கி விட்டதனால்; பால் வரு பசியன் -
தன்னிடத்தே மிக்க பசி உடையவனான; கனலியும் - அக்கினி தேவனும்;
மாருதி வாலை அன்பான் பற்றி
-  அனுமனது வாலை அன்புடன் தனக்கு
ஆதாரமாகப் பற்றிக் கொண்டு; ஆலம் உண்டவன் நன்று ஊட்ட -
விஷத்தை உண்ட சிவபெருமானே ஏவி உண்பிக்க; உலகு எலாம் அழிவின்
உண்ணும் காலமே என்ன -
உலகம் முழுவதையும் ஊழி முடிவில் எரிக்கின்ற
காலத்தைப் போல; கடிதின் உண்டான் - இலங்கை நகரை விரைவாக எரித்து
அழித்தான்.

     யாகங்களைச்செய்ய வொட்டாமல் அரக்கர்கள் தடுத்ததனால்,
உணவின்றிப் பசியினால் வருந்திய தீக்கடவுள், இப்போது, அனுமனது வாலைப்
பற்றிக் கொண்டு, இலங்கை நகரை எரித்து, பசி அடங்கினான், என்பது கருத்து.
அனுமனுக்கு, ஆலம் உண்டவனும், வாலின் தீக்கு, யுகாந்தகாலத் தீயும்,
இலங்கைக்கு உலகமும் உவமைகள்.                            (138)