பக்கம் எண் :

இலங்கை எரியூட்டு படலம்791

மயில் அன்னகாட்சியார் - காட்டிலே (தம்விருப்பின்படி விளையாடுகின்ற)
மயில்  போன்ற சாயலை உடைய மகளிர்கள்; நெடும் புகை - நெடுந்தூரம்
பரந்த புகை; வானகத்தை மாய்த்தலால் - ஆகாயத்தை மறைத்ததனால்;
போனதிக்கு அறியாது - (தம் கணவர் உயர எழுந்து) போன திசையைத் தாம்இன்னதென்று உணராமல்; புலம்பினார் - வாய்விட்டு அழுவாராயினார்.

     வானையும் மறைத்தபுகையில், தம் கணவர் உய்ந்து போன திசை
தெரியாது மகளிர்கள் வருந்தினர் என்க. மாய்த்தல் - மறைத்தல்.       (4)

5947.

கூய்,கொழும் புனல், குஞ்சியில், கூந்தலில்,
மீச்சொரிந்தனர், வீரரும், மாதரும்;
ஏய்த்ததன்மையினால், எரி இன்மையும்,
தீக்கொளுந்தினவும், தெரிகின்றிலார்.

     வீரரும் மாதரும்- அரக்கவீரர்களும் மகளிரும்; கூய் -
(எரிபற்றியதனால்) பேராரவாரம் செய்து; குஞ்சியில் கூந்தலில் - தம்மைச்
சார்ந்தவரின் தலைமயிரில்; கொழும் புனல் - மிக்க நீரை; மீ சொரிந்தனர் -
மேலே ஊற்றுவாராயினர்; ஏய்த்த தன்மையினால் - (அங்ஙனமாகியும்,
தம்மவரின் செம்பட்டை மயிரும் நெருப்பும்) நிறத்தில் ஒத்திருக்கின்ற
இயல்பினால்,; எரி இன்மையும் - (தலைமயிர்களில்) நெருப்பு இல்லாமையும்;
தீ கொளுந்தினவும் - நெருப்புப் பற்றினவற்றையும்; தெரிகின்றிலார் -
வேறுபாடு அறியாதவராக இருந்தார்கள்.

     சில அரக்கர்,தம்மைச் சேர்ந்த ஆடவர் மகளிரின் தலைமயிரில்
நெருப்புப் பிடிக்கவே, கூவி, அவர்கள் தலையில் நீரை ஊற்றியும், எரி
அவிந்ததா, அவிய வில்லையா என்று தெரியாதவராயிருந்தனர். அவர்களது
தலை மயிர் செம்பட்டையாதலின், நெருப்புக்கும் அதற்கும் வேறுபாடு
தெரியவில்லை என்க.                                         (5)

தீயும் புகையும்ஓங்கிப் பரவுதல்

5948.

இல்லில்தங்கு வயங்கு எரி யாவையும்,
சொல்லின் தீர்ந்தன போல்வன, தொல் உருப்
புல்லிக்கொண்டன-மாயைப் புணர்ப்பு அறக்
கல்லி, தம்இயல்பு எய்தும் கருத்தர்போல்.