பக்கம் எண் :

36யுத்த காண்டம் 

29. படைக்காட்சிப் படலம்
 

தன் ஆணையை ஏற்றுப் பலவிடங்களிலிருந்தும் வந்த அரக்கர்
படைகளை   இராவணன்  காண்பதைத் தெரிவிக்கும் பகுதியாதலின்
இப்பெயர்   பெற்றது.   இப்படலம்  'மூலபல வரவு காண் படலம்'
எனவும், 'படைக்காட்டுறு படலம்' எனவும், 'படை வரவுப் படலம்' 
எனவும் வெவ்வேறு பெயர்களுடன் சுவடிகளில் காணப்பெறுகின்றது.
 

இராவணன் தூதுவர்களின் மூலம்  உலகின்  பல பாகங்களிலுமுள்ள
அரக்கர்  சேனைகளை  வரவழைக்க அவை வருகின்றன. அவற்றைக்
காண்பதற்காக இராவணன் கோபுரத்தின்   மேல்  ஏறிப் பார்க்கின்றான்.
படைப்பெருக்கத்தை அளவிட முடியாதெனத்  தூதுவர்  கூறக் கேட்டு
மகிழ்ந்த இராவணன் அப்படைகளின் தலைவர்களை அழைப்பிக்கின்றான்.
வந்த   தலைவர்கள்   செய்தியறிந்து,   'மனிதர்கள்'  என்று   இராம
இலக்குவர்களை   அற்பமாக   மதித்துப்   பேச,   மாலியவான் இராம
இலக்குவரின் பெருமையினையும் வானரங்களின்  வலிமையையுங் கூறிச்
சீதையை விட்டுவிடுதலே விரும்பத்தக்கது என்கின்றான். ஆனால் வன்னி
என்ற அரக்கர் தலைவன் அதற்கு உடன்படாது இந்திரசித்து இறந்தபின்பு
போராற்றி வெல்லுதலே தகுந்தது எனக்கூறுகின்றான். 'பகை வென்று
வருவோம்' என வஞ்சினம் கூறி அரக்கர் எல்லோரும் எழுகின்றனர்.
இது இப்படலத்தின் சுருக்கமாகும்.
 

அரக்கர் சேனை இலங்கையில் நிறைதல்
 

9247.

அத் தொழில் அவரும் செய்தார்; ஆயிடை, 

அனைத்துத் திக்கும்

பொத்திய நிருதர் தானை கொணரிய போய தூதர், 

ஒத்தனர் அணுகி வந்து வணங்கினர், 'இலங்கை 

உன் ஊர்ப்

பத்தியின் அடைந்த தானைக்கு இடம் இலை; பணி 

என்?' என்றார்.

 

அத்தொழில் அவரும் செய்தார் - (இந்திரசித்தின் உடலைத்
தயிலத்   தோணியில்  இடும்)   அத்தொழிலை அந்த ஏவலாளரும்
செய்தனர்; ஆயிடை அனைத்துத்திக்கும் பொத்திய- அப்போது
எல்லாத் திசைகளிலும் நிரம்பியுள்ள; நிருதர் தானை காணரிய போய
தூதர்
- அரக்கர் சேனையைக் கொண்டு வரச் சென்ற